• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7

சாமந்தியின் தற்கொலைக்குக் காரணம் யார் என்று இன்னுமே கண்டுபிடிக்கப் படாத போதும், அவள் உடல் இறுதிக் கிரியைகளுக்காக அவள் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. சீல் வைத்த வீட்டையும் விடுவித்திருந்தனர்.

பூதவுடல் அவர்களின் வீட்டு விறாந்தையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அருகிலேயே தொய்ந்து போய் அமர்ந்திருந்தனர் பெற்றோர்.

அவளின் தற்கொலையே அவர்களை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தது. இதில், போதைப்பழக்கம் இருந்திருக்கிறது என்பது பெரும் இடி என்றால், கன்னித் தன்மையையும் இழந்திருக்கிறாள் என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

இது எல்லாவற்றையும் விட, கூடப் பிறந்தவனையும் பெற்றவரையும் காவல்துறை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது என்று அறிந்த போது, மனதளவில் மடிந்து போயிருந்தனர்.

சொந்தங்கள், உறவினர்கள், அயலட்டையினர், அவளோடு படித்தவர்கள், சாகித்தியனின் பல்கலைக்கழக நண்பர்கள் என்று, வருகிற எல்லோரையும் வீட்டுக்குள் அடக்க முடியாது என்பதால், வீட்டின் முன்னே டென்ட் அடித்து, வாடகைக்கு எடுத்த நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

நான்கைந்து வயதானவர்கள் பூதவுடலின் அருகிலேயே இருந்து, ஆட்கள் வருகிற போது ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர்.

கதிரவனும் நாயகமும் சாதாரண உடையில் அங்கிருந்தவர்களோடு கலந்து நின்றிருந்தனர். பார்வை ஒவ்வொருவரையும் துளைத்துக் கொண்டிருந்தது. ஆதினி தன் நண்பர்களோடு நின்று, இறப்பு வீட்டுக்கு வந்தவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

இறுதிக் கிரியைகள் நடந்து, கூடியிருந்தவர்களின் ஒப்பாரி ஓலத்துடன் சாமந்தியின் சடலம் மயானத்துக்குப் புறப்பட்டது. இத்தனைக்கு மத்தியிலும் கதிரவனின் விழிகள், ஒருவனைக் குறிவைத்துத் தொடந்துகொண்டே இருந்தன.

அவன் அஜய். சாகித்தியனின் நண்பன். எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தாலும் அவனிடத்தில் சற்று அதிகமாக இருந்தது. கலங்கும் விழிகளை மறைப்பதில் முனைந்தபடி சடலத்தைப் பின் தொடர்ந்தான்.

நாயகத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, மற்றவர்களின் கவனத்தைக் கவராமல், அவர்களுக்கு இடைஞ்சலும் கொடுக்காமல், அவனைப் பின் தொடர ஆரம்பித்தான் கதிரவன்.

அஜய், வீதியில் நிறுத்தியிருந்த தன் பைக்கில் ஏறவும், “ஷிட்!” என்று வாய்க்குள் முனகிவிட்டு எதிர் திசையில் நின்ற தன் பைக்கை எடுக்க ஓடினான். எதிரில் இன்னுமொரு பைக் வர, வேகமாக விலகி வழி விடப்போனவன் தட்டி, அவ்விடத்தில் நின்ற ஸ்கூட்டி தரையில் விழுந்தது.

அவனுக்குப் பின்னால் ஓடி வந்த நாயகம், “ஐயோ சேர், சிலுக்கு!” என்று பதறினார்.

“சிலுக்கா? வயசையும் பாக்காம ஏதாவது சொல்லப் போறன் நாயகம் அண்ணா. கெதியா வாங்க!” எவ்வளவு அவசரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரம் போய் என்ன பேச்சு இது என்கிற சினத்தில் சிடுசிடுத்துவிட்டு வேகமாக ஓடிப் போனான். அதே வேகத்துடன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து அவர் அருகில் நிறுத்த அவரும் ஏறிக்கொண்டார்.

அவன் வேகம் எடுக்க முனைந்த நொடியில் குறுக்காக வந்து நின்றாள் ஆதினி. “என்ன இது?” என்றாள் தன் ஸ்கூட்டியை காட்டி.

“ப்ச்! மறிக்காம முதல் தள்ளுங்க!” சிடுசிடுத்தபடி அவளைச் சுற்றிக்கொண்டு போக முனைந்தவனை அவள் விடவில்லை. மீண்டும் மறித்து நின்றாள்.

“நாயகம் அங்கிள் சொல்லியும் அவ்வளவு திமிராப் போறீங்க. மரியாதையா இறங்கி சிலுக்க நிமித்தி வச்சிட்டுப் போங்க!” என்றாள் உத்தரவாக.

அவர்களின் அவசரம் தெரியாமல் நடக்கும் அவள் மீது கதிரவனுக்கு எரிச்சல் பொங்கிற்று. அவன் எதையாவது சொல்வதற்குள் வேகமாக இறங்கி, அவளின் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்திவிட்டார் நாயகம்.

அதன் பிறகுதான் அவனை விட்டாள். அப்போதும், “முதல் முறை எண்டபடியா இத இதோட விடுறன். இனி என்ர சிலுக்குக்கு ஒரு அவமானம் நடந்தா, அது எனக்கு நடந்த மாதிரி. இத நினைவில வச்சு நடந்துகொள்ளுங்க!” என்று சொன்ன அவள், காற்றுடன்தான் கதைக்கவேண்டியிருந்தது.

அஜையைத் துரத்திக்கொண்டு பறந்திருந்தான் கதிரவன்.

பிரேதம் நாற்சந்தியைக் கடந்த பிறகு மயானத்துக்கு பைக்கில் செல்வதற்காகத் திரும்பி வந்துகொண்டிருந்த காண்டீபனின் பார்வையிலும் நடந்த அனைத்தும் பட்டது. அவளின் ‘சிலுக்கில்’ சின்ன சிரிப்பொன்று உதட்டோரம் அரும்பிற்று.

கூடவே நடந்து வந்துகொண்டிருந்த மாணவனிடம், “ஆர் அது?” என்று வினவினான்.

“ஆதினி சேர். எங்கட கம்பஸ்ல எங்கட பகல்ட்டி(faculty)தான். ஆனா, லோ(Law).” என்றான் அவன்.

“ஓ!” என்றவனின் விழிகள், இன்னுமே தன் சிலுக்குடன் என்னவோ கதை பேசிக்கொண்டு இருந்தவள் மீது சுவாரசியத்துடன் படிந்தது. அவள் வாய்க்குச் சட்டம் மகா பொருத்தம் என்றுதான் தோன்றிற்று.

“நீதிபதி இளந்திரையன் சேரின்ர மகள்.” அந்த மாணவன் வழங்கிய மேலதிகத் தகவலில் அவன் நடை நின்று போயிற்று.

“உண்மையாவா?”

“இல்லாம போலீசையே இந்தப்பாடு படுத்தேலுமா சேர்?”

பார்வை அவள் புறமிருக்கச் சிறு தலையசைப்புடன் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, அவளை நோக்கி நடந்தான்.

“ஏதும் ஹெல்ப் வேணுமா?”

ஸ்கூட்டியில் பட்டிருந்த தூசைத் தட்டிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தாள். இவனைக் கண்டதும், “காண்டீபன் சேர்!” என்று முகம் மலர்ந்துவிட்டு, “கீழ விழுந்திட்டுது. மற்றும் படி ஒரு பிரச்சினையும் இல்ல.” என்றபடி அதில் ஏறி அமர்ந்தாள்.

“என்னைத் தெரியுமா?” மெல்லிய ஆச்சரியத்துடன் வினவினான் காண்டீபன்.

“தெரியாம? ஆர்ட்ஸ் பகல்டி முழுக்க எங்கட காண்டீபன் சேர் அப்பிடி, எங்கட காண்டீபன் சேர் இப்பிடி எண்டு காதுல ரெத்தம் வர வைப்பினம். அப்பிடியான ஆளைத் தெரிஞ்சு வைக்காம இருப்பனா?”

சரளமாக வந்த அவள் பேச்சில் ஈர்க்கப்பட்டு, “அது சும்மா பாசத்தில சொல்லி இருப்பினம்.” என்று அவளிடம் பேச்சை வளர்த்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வையால் அவனை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, “சேச்சே! அப்பிடி இருக்காது.” என்றாள் தலையையும் மறுப்பாக அசைத்து.

அவளின் பாவனையில் முறுவல் விரிய, “விளங்கேல்ல.” என்றான் அவன்.

“வரலாறு வாத்திக்குத் தமிழ் விளங்கேல்ல. இதுதான் இந்த நாட்டின்ர இண்டைய நில!” என்று பெரிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, “அவே சொன்னது சும்மாவா இருக்காது எண்டு சொன்னனான்.” என்று விளக்கினாள் அவள்.

இப்போது அவன் உதட்டு முறுவல் நன்றாகவே விரிந்துபோயிற்று. கூடவே, அவனை அவள் கவனித்திருக்கிறாள், அவனைப் பற்றிய கணிப்பும் அவளிடம் ஏற்கனவே இருந்திருக்கிறது என்றும் புரிந்தது.

“வரட்டா சேர்.” என்றபடி புறப்பட்டவளுக்குச் சரி என்று தலையை அசைத்துவிட்டு, “கவனமாப் போகோணும்!” என்றான் போய்க்கொண்டிருந்தவளின் முதுகைப் பார்த்து.

*****

அஜயைத் தேடி வந்த கதிரவனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் அவன் எங்கோ தப்பி ஓடியிருந்தான். ‘எல்லாம் அவளால! அவளைப் பாத்தாலே எனக்கு ஏழரைதான்!’ மனம் ஆதினியைத் திட்டித் தள்ளியது. உடனேயே எல்லாளனுக்கு அழைத்து அனைத்தையும் சொன்னான்.

‘இவளொருத்தி கால நேரம் தெரியாம!’ அவனுக்கும் அவள் மீதுதான் கோபம். அதைக் காட்டாமல், “அவன்ர வீட்டு அட்ரெஸ் என்னட்ட இருக்கு. அனுப்புறன். அங்க போய்ப் பாருங்க!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

*****

அன்று மாலை, திருமணம் பற்றிப் பேசுவதற்காக ஆதினியை அவரின் அலுவலக அறைக்கு அழைத்தார் இளந்திரையன். முதலில் படிப்பு, நண்பர்கள் என்று பொதுவாகப் பேச்சை நகர்த்திவிட்டு, “உங்களுக்குக் கலியாணத்துக்குப் பாத்திருக்கிறன் பிள்ளை.” என்று விடயத்துக்கு வந்தார்.

“என்னது கலியாணமா?” என்று வாயைப் பிளந்தாள் ஆதினி. அவளுக்குச் சிரிப்பு வேறு வந்து தொலைத்தது. இதுவரையில் மருந்துக்கும் யோசித்திராத ஒன்றைப் பற்றித் திடீரென்று கேட்டால் அவளும் என்னதான் செய்வாள்?

அவர் முகத்திலும் மெல்லிய முறுவல். “இப்பவே கலியாணம் எண்டா சொன்னனான்? பாத்திருக்கிறன் எண்டுதானே சொன்னனான்.”

“அதுவும்தான் ஏனப்பா இப்ப?”

“நல்ல பெடியனா அமையிற நேரம் பிடிச்சிடோணும் தானேம்மா.”

“எவ்வளவு நல்ல பெடியனா இருந்தாலும் இப்ப ஒண்டும் வேண்டாம்!”

“அப்பிடிச் சொல்லக் கூடாதம்மா. இது வாழ்க்கை விசயம். தானா அமையிற நேரம் விட்டுட்டம் எண்டா திரும்பக் கிடைக்காது.”

“அந்தளவுக்கு நல்ல்ல்ல்ல பெடியன் ஆரு?” வயதுக்கு வந்துவிட்டாள், கடமையை முடித்து விடுவோம் என்று நினைப்பவர் இல்லை அவள் தந்தை. பெண்பிள்ளை தைரியமாக, சுயமாக, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்புகிறவர். அப்படியானவர் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் அளவுக்கான அந்த நல்லவன் யார் என்கிற குறுகுறுப்போடு வினவினாள்.

“எல்லாளன்.”

“என்னது அவரா?” அவளுக்கு நம்பவே முடியவில்லை. அவன் எப்படி அவளை? இது அறிந்தால் ஊரை விட்டு ஓடியிருக்க மாட்டானா?

“இது அவருக்குத் தெரியுமாப்பா?” உதட்டில் மலர்ந்துவிட்ட குறுஞ்சிரிப்புடன் வினவினாள்.

“எல்லாளனைக் கேட்டு, அவர் ஓம் எண்டு சொன்ன பிறகுதான் உங்களுக்குச் சொல்லுறன்.”

ஆதினியால் இதையும் நம்ப முடியவில்லை. அவளின் தந்தை இதையெல்லாம் விளையாட்டுப் பேச்சாகப் பேசுகிறவர் இல்லை என்பதால் மட்டுமே நம்பினாள். ஆனபோதிலும், அவன் எப்படிச் சம்மதித்தான் என்றான் என்றுதான் ஓடிற்று.

“கலியாணம் அண்ணாக்குத்தான். உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் மாதிரி மோதிரம் மாத்தி விடுவம். படிப்பு முடிஞ்ச பிறகு கலியாணத்தை வைக்கலாம்.”

“ஓ!”

“என்னம்மா? ஒண்டும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” மகள் மனநிலையை ஓரளவிற்கு அவராலும் கணிக்க முடிந்தாலும் வினவினார்.

“உண்மையா அவரிட்டக் கேட்டீங்களா அப்பா?”

“கேக்காம? என்ர பிள்ளையின்ர கலியாணத்தப் பற்றிச் சும்மா கதைப்பனாமா? அகரன், சியாமளா, எல்லாளன் மூண்டு பேரையும் வச்சுக் கதைச்சு, எல்லாருக்கும் விருப்பம் எண்ட பிறகுதான் உங்களுக்குச் சொல்லுறன். இனி நீங்கதான் உங்கட முடிவச் சொல்லோணும்.”

இப்போது அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. வேறு எந்தக் கொம்பனாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மறுத்திருப்பாள். அன்று அவனிடம் சலனப்பட்டுவிட்ட மனது, மறுப்பை உறுதியாகத் தெரிவிக்க விடாமல் தடுமாறியது.

“என்னம்மா? பிடிக்கேல்லையா?”

“எனக்குத் தெரியேல்லயப்பா. இதப் பற்றியெல்லாம் யோசிச்சது இல்ல. அவர் ஓம் எண்டு சொன்னதை நம்பேலாம இருக்கு.”

ஆரம்பத்தில் முடிவாக மறுத்தவள் எல்லாலாளன் என்றதும் குழம்பி நிற்பதே அவள் மனத்தைச் சொல்ல, “ஏன் நம்பேலாது? என்ர பிள்ளைக்கு என்ன குறையாம்? இந்த வீட்டு இளவரசியக் கட்ட ஆருக்குத்தான் கசக்கும்?” என்றார் அவர்.

அப்படிச் சொன்ன தந்தையை ஆதினி மிகுந்த ஆதூரத்தோடு நோக்கினாள். அவனோடு அவள் வாழ்க்கையைப் பிணைத்துவிட்டால் காலத்துக்கும் நன்றாக வாழ்வாள் என்று நம்புகிறார். அவனும் அநியாயத்துக்கு நல்லவனாயிற்றே! அதற்குமேல் பெரிதாக எதையும் அவள் யோசிக்கவில்லை.

“உங்களுக்குப் பிடிச்சிருக்காப்பா?” என்று, அதுதான் முக்கியம் போல் வினவினாள்.

“கூடாத பழக்கம் இல்ல. ஒழுக்கமான பிள்ளை. குணத்தில குறை சொல்ல ஒண்டுமே இல்ல. நல்ல வேல. என்ர பிள்ளைக்கு நல்ல பொருத்தமும். அப்பிடியானவர ஏன் கை நழுவ விட? எனக்கு அவர் மருமகனா வந்தா, அத விடச் சந்தோசம் வேற இல்ல.” என்று அவரும் தன் மனத்தைச் சொன்னார்.

அவ்வளவுதான்! வேறு கேள்விகள் எதுவும் அவள் கேட்கவில்லை. “அப்ப எனக்கும் ஓகே தானப்பா! ஆனா, நான் படிச்சு முடிச்சு, அந்த எள்ளு வயலை ஏதாவது ஒரு கேஸுலயாவது வெண்ட பிறகுதான் கலியாணம்!” என்றுவிட்டு எழுந்துகொண்டாள்.
 

Goms

Active member
என்னாது, எள்ளு வயலை ஏதாவது கேசுல வென்ற பிறகா?🤔 அப்போ உனக்கு அறுபதாங் கல்யாணமாவது நடக்குமா?🤩🤩🥰
 
Top Bottom