• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 20

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 20

மூடிய கண்களுக்குள் வந்து நின்று குறும்போடு சிரித்தான் விக்ரம்! மனக்கண்ணில் கூட நேராகப் பார்க்கமுடியாமல் அவன் விழிகள் அவளை வீழ்த்தியது!

அன்று, ‘இப்பவெல்லாம் நினைவு முழுக்க நீதான் நிறைஞ்சிருக்கிற யாமினி’ என்று அவன் சொன்னதுபோல, அவளின் நினைவுகளிலும் அவன்தான் கலந்து போயிருந்தான். அவன் இல்லாத ஒரு நினைவு கூட அவளிடமில்லை.

அவன் பிறந்தநாள் அன்று பார்ட்டிக்காக ஹோட்டல் போனபோது நடந்தவைகளை எண்ணியவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

இவர்கள் ஹோட்டலுக்குள் நுழைய, “வாங்கோ வாங்கோ!” என்று வரவேற்றனர் அஜிதாவும் சந்தியாவும்.

அவர்கள் இருவரும் ஒருபக்கம் இருக்க, மற்ற பக்கம் மனைவியை மகளோடு உள்ளே அமர்த்தித் தானும் அமர்ந்துகொண்டான் விக்ரம்.

“பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!” என்று அஜிதா வாழ்த்த, “நன்றிம்மா” என்று ஏற்றுக்கொண்டான்.

“முதல் கேக் வெட்டுவம். பிறகு சாப்பாடு..” என்று அஜிதா சொல்ல,

“திரும்பவுமா?” என்றவனின் கையில் மேசைக்குக் கீழே படக்கென்று கிள்ளினாள் யாமினி.

‘அம..மா!’ வாய்க்குள் முனகிக்கொண்டே அதிர்ந்துபோய் விக்ரம் திரும்பிப் பார்க்க, ‘மூச்!’ என்றாள் கண்ணாலேயே.

அவன் கண்களில் சிரிப்பு மலர்ந்தது!

“அவர் என்ன சின்னப்பிள்ளையா? கேக் எல்லாம் வெட்ட. அதெல்லாம் வேண்டாம்.” என்றாள் தோழிகளிடம்.

‘அடிப்பாவி! நான் சொன்னதையே திருப்பிப் படிக்கிறாளே..’ வாயைப் பிளக்காத குறையாக அவளைப் பார்த்தான் விக்ரம்.

“ஏன் சின்னப்பிள்ளைகள் மட்டும் தான் கேக் வெட்டோணுமா? அண்ணா வெட்டினா வெட்டுப் படாதா? ஏன் அண்ணா இப்ப இந்த இடத்துல கேக் கொண்டுவந்து வச்சா வெட்ட மாட்டீங்களா?” என்று சந்தியா மல்லுக்கு நிற்க,

“அதுக்கென்ன.. வெட்டினா போ..” என்று சொல்லி முடிக்க முதலே படார் என்று கையில் ஒரு அடி விழ, முகம் கொள்ளா சிரிப்புடன் மனைவியைப் பார்த்தான் விக்ரம்!

நம்பவே முடியவில்லை அவனால்! அவளா இப்படியெல்லாம் நடப்பது?

‘என்ன சிரிப்பு?’ என்று முறைத்தவளை ரசனையாகப் பார்த்தான்.

‘என்னைத் தொடாதீங்கோ’ என்று அன்றொருநாள் அழுதவள் இன்று அவனுக்கு அடிக்கிறாள்! மனம் இனிமையாய் அவளின் மாற்றத்தை உள்வாங்க, தோழிகளிடம் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தவளை ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

“நீ கேக்க கொண்டுவா. எல்லாரும் சாப்பிடுவம். ஆனா அவர் வெட்ட மாட்டார்.” என்றாள் யாமினி தோழியிடம்.

அவளுக்கு ஏனோ அவன் இரண்டாவது தடவையாகக் கேக் வெட்டுவதில் விருப்பமில்லை. அதைவிட அது அவர்களுக்குள் நடந்த மிக மிக அழகான தருணம்! முதன் முதலாக முத்தமொன்றைப் பரிசாக அவள் வழங்கிய இனிமையான நிகழ்வை பொத்தாம் பொதுவில் கொண்டாடி, அதன் இனிமையைக் குறைக்க அவள் தயாரில்லை. எனவே வந்த கேக்கை பொதுவில் அவளே வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள்.

“வர வர இவளுக்குப் பிடிவாதம் கூடுது அண்ணா.” என்று தோழியை அவனிடம் போட்டுக் கொடுத்துவிட்டு, “இந்தாங்கோ, இது எங்கட கிஃட்!” என்று ஒரு பார்சலை அவனிடம் நீட்டினர் இருவரும்.

“இதெல்லாம் எதுக்கம்மா?” என்றபடி அவன் வாங்க,

“அது எங்கட சந்தோசத்துக்கு அண்ணா.” என்றவள், “நீ என்னடி குடுத்தனி?” என்று யாமினியிடம் கேட்டாள்.

“இவர் போட்டிருக்கிற உடுப்பு. நல்லாருக்குதானே?!” என்று கேட்டாள்.

“அண்ணாக்கு சூப்பரா இருக்கு!”

“இன்னுமொண்டும் தந்தவள்.” என்று கோர்த்துவிட்டான் விக்ரம்.

அது போதாதா சந்தியாவுக்கு!

“என்னடி அது? சொல்லு சொல்லு!” என்று நின்றாள்.

“அவர் சும்மாடி! இது மட்டும்தான்.” என்றவள், கணவனை முறைக்க அவனோ குறுஞ்சிரிப்புடன் அவளின் இதழ்களைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான்.

அவனின் பார்வையில் தடுமாறினாலும் அவளின் கண்களோ அவனது கன்னத்துக்கு ஓடியது.

ஆசையும் நாணமும் மின்னக் கொடுத்த முத்தம் இன்னோர் முறை கொடுக்கலாமா என்கிற ஆசையைத் தூண்ட, தன் மனம் போகும் போக்கை எண்ணி அதிர்ந்துபோனாள் யாமினி.

தன்னைக் கண்டுகொள்வானோ என்றஞ்சி பார்க்க, அவனும் அதைத்தான் அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான், கண்கள் வழியாக.

ஒருகணம் மூச்சடைக்கச் சட்டென்று விழிகளைத் திருப்பிக் கொண்டாள். நெஞ்சு படபட என்று இனிமையாக அடித்துக்கொள்ளத் தொடங்கிற்று!

“நீ பொய் சொல்லாம சொல்லு! என்ன அது?” என்று அப்போதும் கேட்டுக் கொண்டிருந்தாள் அஜிதா.

இப்படியே அவர்களின் உணவு வேளை கழிய அங்கிருந்தே விடை பெற்றனர் தோழியர். இவர்கள் மூவரும் கடற்கரைக்கு வந்தனர். மதிய நேரமாகையால் பெரிதாகக் கூட்டமில்லை. அன்று அளவான வெய்யில் வேறு கடல்காற்றுக்குத் தோதாக அமைந்துவிட, சற்றுநேரம் கால் நனைத்து மகளோடு நீரில் விளையாடினார்கள்.

சந்தனா மண் அள்ளி விளையாடத் தொடங்க, அவளோடு சேர்ந்து மணல் வீடு கட்டினான் விக்ரம். சந்தனாவுக்கோ, பெரும் குதூகலம். அதைத் தொட்டுத் தொட்டு அவள் விளையாட, அவளின் அருகிலேயே அமர்ந்துகொண்டாள் யாமினி.

அதற்காகவே காத்திருந்தவன் அவள் மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொண்டான். புன்னகையோடு அவன் கேசத்துக்குள் கைகளை நுழைத்து அவள் கோதிக் கொடுக்க, அந்தச் சுகம் அனுபவிப்பதற்காகவே கடல் கடந்து வந்தவன் கண்களை மூடிக்கொண்டான்.

தாய்மடியின் சுகம் அவன் நினைவிலில்லை. தாரத்தின் சுகம் உடலின் ஒவ்வோர் அணுவிலும் கலந்துகிடந்து பரவசத்தைச் சேர்த்துக் கொண்டிருந்தது. அவளின் மடி தரும் சுகமே போதும் போலிருக்க, அப்படியே கிடந்தான்.

அவனின் செல்லப் பெண்ணோ ஓடிவந்து அவன் மார்பின் மீது அமர்ந்துகொண்டாள். அவன் கைகள் பாசத்தோடு அவளை அணைக்க, சற்றுநேரம் அவனோடு கிடந்தவள் திரும்பவும் போய் அந்த வீட்டோடு விளையாடினாள். மறுபடியும் ஓடிவந்து தகப்பனின் நெஞ்சில் அமர்ந்துகொண்டு அந்த வீட்டைப் பார்ப்பதும், பிறகு போய் அதோடு விளையாடுவதும், திரும்ப வந்து அவன் மார்பில் இருப்பதுமாக இருந்தாள்.

மகளைக் கவனித்துவிட்டு, “நீங்க இங்க வந்திட்டீங்க, கண்ணா அங்க தனியா இருப்பானா?” என்று கேட்டாள் யாமினி.

சந்தனாவே தகப்பனை இவ்வளவு நாடும்போது, டெனிஷ்?

நண்பர்களோடு விளையாடுகையில் சந்தோசமாக இருந்தாலும், ஒருநேரமாவது அப்பா இல்லையே என்று அவன் நினைத்துவிட்டால்?

“இப்ப அங்க ஸ்கூல் லீவுதானே யாமினி. அவனையும் கூட்டிக்கொண்டு வருவம் எண்டுதான் லீவுக்க ப்ளான் பண்ணினான். இங்க வெயிலாம், அதால தான் தன்ர பெஸ்ட் பிரெண்டோட அவேன்ர பண்ணை வீட்டுக்கு போறன் எண்டான். அங்க போறது எண்டா அவனுக்கு நல்ல விருப்பம். குதிரைகள் இருக்கு. ஆடு கோழி மாடு எண்டு எல்லாம் இருக்கு. இன்னும் இயற்கையைக் கைவிடாத ஒரு அழகான கிராமம். அங்க பிரெண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து சைக்கிள் ஓடுறது, ஸ்விம் பண்றது, மலை ஏறுறது, கிரில் போட்டுச் சாப்பிடுறது எண்டு அவேக்குச் சந்தோசமா போகும்.”

“ஆனா.. பயமில்லையாப்பா? குதிரைச்சவாரி எல்லாம் போறானாம். தம்பி சின்னப்பிள்ளை எல்லோ.. நீங்களும் பக்கத்தில இல்ல..”

“நீ கற்பனைலேயே கண்டதையும் நினச்சு கவலைப்படாத. அப்படி என்ன ஏது எண்டு தெரியாம அனுப்புவனா? அவே எங்கட வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கீனம். பத்துவருஷ பழக்கம். ஒவ்வொரு வருசமும், நான் அங்க இருந்தாலுமே இவன் அங்க போய்டுவான். அங்க கிராமத்துல ஒரு ஓமா, ஓப்பா(அம்மம்மா, தாத்தா) வேற இருக்கீனம். அவே நல்ல கவனம்.” என்று அவன் விளக்கிய பிறகுதான் சமாதானமானாள் யாமினி.

“யாழ்ப்பாணம் போய் மரகதம் அம்மாவையும் பாத்துக்கொண்டு வருவமா? பாவம் அவா.. தனியாவே இருக்கிறா. ஒருக்கா நாங்க போய்வந்தா சந்தோசமா இருக்கும்.” என்றாள் யாமினி.

“ம்ம்.. போவம். போய்ப் பாத்துக்கொண்டு வாடா எண்டு அசோக்கும் சொன்னவன்.”

“அப்ப, அவவுக்கு எடுத்து சொல்லவா?” என்று செல்லை அவள் எடுக்க,

தடுத்து ஃபோனை வாங்கியபடி, “வேண்டாம், சொல்லாத.” என்றான் விக்ரம்.

கேள்வியாக அவள் ஏறிட, “நாங்க வாறது தெரிஞ்சா எங்களுக்காகக் கஷ்டப்பட்டுச் சமைப்பா. பாவம் எல்லோ. வயசான காலத்துல ஏன் கஷ்டத்த குடுப்பான்.” என்றான் அவன்.

அதுவும் உண்மைதான் என்று அவளும் இருந்துவிட, கையிலிருந்த போனை சாதாரணமாக ஆன் பண்ணினான் விக்ரம். உடனேயே வந்தது அவனது ஃபோட்டோ! அதுவும் அன்று அவன் அனுப்பிய அதே போட்டோ!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கண்கள் மின்ன அவளைப் பார்த்தான். ஒருகணம் பிடிபட்டுவிட்ட உணர்வில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள் யாமினி.

அடுத்தகணம், “என்ர ஃபோனை உங்கள யாரு நோண்டச் சொன்னது? தாங்கோ!” என்று அவள் பறிக்க முனைய,

“நோண்டின படியாத்தானே பல உண்மைகள் வெளிவந்திருக்கு.” கொடுக்காமல் விளையாட்டுக்குக் காட்டிக்கொண்டே ஒரே ஜம்ப்பில் எழுந்தான் விக்ரம்.

அவளும் வேகமாக எழுந்து அவனிடம் பறிக்கப் பார்க்க, அன்றுபோலவே இன்றும் அவன் விளையாட்டுக் காட்ட, தாய் தகப்பனுக்குள் நடக்கும் விளையாட்டைக் கண்டு தன் மண் மாளிகையையே மறந்துவிட்டு கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினாள் சின்னவள்.

“இப்ப தரப்போறீங்களா இல்லையா?” அவள் மிரட்ட,

“நீ பாக்கத்தான் அந்தப் போட்டவ கேட்டனி எண்டு சொல்லு, தாறன்.” என்றான் அவன்.

“மாட்டன்! நீங்க ஃபோனைத் தாங்கோ!”

“அப்ப, முடிஞ்சா நீயா வாங்கு” என்றான் அவன்.

அவனது ஒரு தோளையே பற்றி, எம்பி மற்ற கையில் இருக்கும் ஃபோனை பிடுங்க அவள் முயல அப்படியே அவளை வளைத்தான் விக்ரம்.

திமிறியவளை ஒற்றைக் கையாலேயே அடக்கி, மற்ற கையால் ஃபோனின் கலரிக்குள் போக, தன் குட்டு அத்தனையும் வெளி வரப்போகிறது என்று வேகமாக அவள் அதைத் தடுக்க முயல, அவளோடு சேர்த்து அவளின் கரங்களையும் சிறைப் பிடித்தான் அவன்.

ஒன்றும் செய்யமுடியாமல் அவள் திணற, அங்கிருந்த ஃபோட்டோக்களைக் கண்டவன் ஒருகணம் ஆனந்தமாக அதிர்ந்துதான் போனான்.

அவள் தனக்காகத்தான் ஃபோட்டோவை கேட்டாள் என்பது அவன் அறிந்ததுதான்! ஆயினும், அதை நேரிலேயே கண்டபோது மனம் பரவசமாகிப் போனது.

‘போட்டோ அப்’ பின் உதவியுடன் அவனையும் அவளையும் பல போஸ்களில் இணைத்திருந்தாள் யாமினி.

அதுவும் அவனது போட்டோ ஒன்றுதான். அந்த விக்ரமை காதலோடு பார்க்கும் யாமினி.. குறும்போடு பார்க்கும் யாமினி.. செல்லமாய் முறைக்கும் யாமினி.. என்று அவளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவன் மனக்கண்ணுக்குள் வந்து நிற்கும் யாமினிகளையே அவனுக்கு இணையாக்கி இருந்தாள்.

அவள் தன்னிடம் சொல்லாத நேசத்தைத் தன் ஃபோட்டோவிடம் சொல்லியிருப்பதைக் காணக் காண அவன் அணைப்பு இறுக்கிக்கொண்டு போயிற்று!

“அப்பா! பப்ளிக் பிளேஸ்..” என்று திணறியபடி மகளைப் பார்க்க, அவளோ ‘இதுகள் இரண்டும் இப்ப அடிபடும் அடுத்த நிமிஷம் ஒற்றுமையாகும்’ என்று தெரிந்தவள் போன்று தன் வீட்டுக்கு விளையாடப் போயிருந்தாள்.

விக்ரமோ, அவள் சொன்னதைக் காதில் வாங்கியதற்குச் சான்றாக, பிடியைச் சற்றே தளர்த்தினானே தவிர, நிலையை மாற்றவில்லை.

‘என்ன இவன் சொல்லியும் கேக்காம!’ என்று அவள் பார்க்க, அங்கிருந்த ஃபோட்டோவை கண்டவளுக்கு மூச்சடைத்தது. அவளின் ரகசியம் முழுமையாக அம்பலத்துக்கு வந்திருந்தது!

விக்ரமுக்கு ஒரு சிகப்பு ரோஜாவை நீட்டிக்கொண்டிருந்தாள் யாமினி. காதலைச் சொல்லும் கண்களோடு!

அவளது இதயம் ஒருகணம் நின்று ஆனந்த அதிர்வில் படபடவென்று அடித்துக்கொள்ளத் தொடங்க, அதை உணர்ந்து அவளைப் பார்த்தான் விக்ரம்.

அதே சிவப்பு ரோஜாக்கள் அவள் கன்னத்திலும் பூக்க, ரசனையோடு பார்த்தவனின் பார்வை மாறியது!

இந்தச் சிவப்பும், அவள் காட்டும் வெட்கமும் தன்னை முழுமையாகச் சுழற்றிப் போடுவதை உணர்ந்தான் விக்ரம்! அந்த வெட்கத்துக்கும் சிவப்புக்கும் அவன் ரசிகனாகிக் கொண்டிருந்தான்! சாதாரணமாக அல்ல, மிக மிக மோசமான ரசிகனாக! தன் தலைவிக்காக எதையும் செய்யத் துடிக்கும் ரசிகனாக!

அந்தப் பார்வையின் பொருள் விளங்கியும் விளங்காமல் அவளுக்குள் இறங்க, தன்னைக் கட்டிப்போட்ட அவன் பார்வையின் வீச்சிலிருந்து விடுபடமுடியாமல் தடுமாறினாள் யாமினி.

தன் ஆழ்மனம் அவனோடு கொண்டுவிட்ட நேசத்தை.. அவனிடம் காட்டத்தெரியாமல் கூச்சத்தோடு ஒளித்துவைத்த அன்பை அவனாகவே அவளுக்குள் நுழைந்து கண்டுகொள்வது போலிருக்க, அதற்குமேலும் தாளாமல் தலை குனிந்தவளை மனமெங்கும் இன்பம் பொங்க தன் தோளில் சாய்த்துக்கொண்டான் விக்ரம்.

அவனுக்கும் அவளுக்குமான வாழ்க்கைப் பாதையில் நேசப்பூக்கள் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியிருப்பதை இருவருமே அறியாமலில்லை. இப்போதோ அந்தப் பூக்கள் சடசடவென்று பூத்து, வெகுவேகமாக அவர்களைச் சுற்றி படர்ந்துகொண்டிருப்பதைப்போல் உணர்ந்தவன் மனம் உவகையில் துள்ளியது!!

தன் நினைவுகளெங்கும் நீக்கமற அவள் எப்படி நிறைந்தாளோ அப்படித் தானும் அவளுக்குள் நிறைந்திகொண்டிருக்கிறோம் என்பதைச் சந்தோசமாக உள்வாங்கிக் கொண்டான்!

தங்களிடம் வந்த மகளைக் கண்டு மனைவியை மெல்ல விட்டான்.

“செல்லம்மா வாங்க..” என்று அவளைத் தூக்கிக்கொண்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு வீடு சென்றவனுக்கு அன்றைய தன் பிறந்தநாளுக்கு மனைவி தந்த பரிசுகள் விலைமதிப்பற்ற வைரங்களாகவே தோன்றிற்று!

வீட்டுக்குப் போனதும் வடை சுட்டு தேநீரோடு பரிமாறினாள் யாமினி. அவன் முன் வரவே முடியாமல் வெட்கமும் கூச்சமும் தடுத்தாலும், அவனுக்குப் பிடித்ததைச் செய்து கொடுப்பதில்தான் அவளின் சந்தோசமே அடங்கிக் கிடந்தது!

அவள் திரும்பவும் சமையலறை செல்லப்போக, “நீயும் வா.. சேந்து சாப்பிடுவம்.” என்று அவளையும் தன்னருகில் அமர்த்திக்கொண்டான். கடற்கரையில் ஆடியதாலோ என்னவோ அவன் மடியில் தலைவைத்து ஏற்கனவே உறங்கிப் போயிருந்தாள் சந்தனா.

“தாங்கோ, கட்டில்ல கிடத்துவம்” என்று அவள் கேட்க,

“விடு.. படுக்கட்டும்” என்றான் அவன்.

தான் போனபிறகு கட்டிலில் தானே கிடப்பாள் என்று விக்ரம் நினைக்க, இந்தச் சந்தோசமும் மயக்கமும் இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தானே.. என்று எண்ணி உள்ளூர மருகினாள் யாமினி.

நாளை திங்கட்கிழமை. டொச் வகுப்புக்கு போகவே மனமில்லை. அவன் நிற்கும் நாட்களில் அவள் வகுப்புக்குப் போக, அவன் போனபிறகு என்ன செய்வாள்?

அவன் தோளில் மெல்லச் சாய்ந்துகொண்டாள்.

“என்னம்மா?” அவளை உணர்ந்தவனாகக் கேட்டான் விக்ரம்.

“நீங்க நிக்கிற வரைக்கும் நான் வகுப்புக்கு போகேல்ல. அதை வந்து நாளைக்கு டீச்சரிட்ட சொல்லிவிடுங்கோ.” என்றாள் அவனின் கையைப் பற்றிக்கொண்டு.

என்னவோ, முதல் வகுப்புப் படிக்கும் பெண் ‘நான் இண்டைக்குப் பள்ளிக்கூடம் போகேல்லப்பா’ என்று கெஞ்சுவது போலிருந்தது அவனுக்கு.

இதழ்களில் அரும்பிய புன்னகையோடு அவளையே பார்க்க, ‘என்ன பதிலை காணோம்’ என்று நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“பிறகு ஒண்டும் விளங்காதே.. படிக்கக் கஷ்டமே.” அவள் கண்களோடு கண்களைக் கலந்தபடி சொன்னான்.

“அது விளங்கும். நான் படிச்சிடுவன். சந்தியாட்ட பேப்பர்ஸ கொண்டுவர சொன்னா, அவள் கொண்டுவருவாள். தெரியாதத நீங்க சொல்லித் தரமாட்டீங்களா? நீங்க நிக்கமட்டும் தானே.” எனும்போதே அவள் குரல் தழுதழுத்தது.

இப்போதுவரை ‘எத்தனைநாள் லீவில் வந்தீங்க?’ என்றோ, ‘எப்ப திரும்பப் போறீங்க?’ என்றோ அவள் கேட்கவேயில்லை. கேட்க பயம். நாளைக்கு.. இல்லை இன்னும் ரெண்டு நாளில் என்று சொல்லி விடுவானோ என்று.

எப்படியும் போகத்தான் போகிறான் என்று தெரியும். அந்த நாளை தெரிந்துகொண்டு இன்னும் ரெண்டுநாள் இன்னும் ஒருநாள் என்று துடிக்க அவள் தயாராயில்லை. அவனோடான ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்ந்திட தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

“நீதான், அந்தப் போட்டோவ உனக்காகக் கேக்கேல்ல. பிறகும் ஏன் வகுப்புக்கு போகாம நிக்கிற?” என்று ஆரம்பித்தான் அவன்.

அவன் கையிலேயே ஒன்று போட்டாள் யாமினி. “அதுதான் எல்லாத்தையும் பாத்தாச்சு எல்லோ. திரும்பவும் ஏன் அந்தக் கதைய ஆரம்பிக்கிறீங்க?” எனும்போதே கண்களால் சிரித்தான் அவன்.

“நான் வந்து சொன்னா எனக்கு என்ன தருவாய்?” அவன் பேரம் பேச,

“என்ன வேணும் சொல்லுங்கோ?” என்று தைரியமாகக் கேட்டாள்.

அவன்தான் சாப்பாட்டுப் பிரியனாயிற்றே! அதுவும் அவளின் கைச்சமையல் பிரியன்! மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன உறைப்பா எதையாவது செய்துதரச்சொல்லி கேட்பான் என்று நினைத்துக்கொண்டு அவள் கேட்க,

“ஒரு கிஸ்! தரவேண்டிய இடமும் வேற.” என்றான் அவன் அவளின் இதழ்களையே மொய்த்தபடி.

அதை எதிர்பாராத அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள் யாமினி. அவன் கண்களில் தெரிந்த சிரிப்பில், “நான் மாட்டன்!” என்றபடி அவனின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

“அப்ப, நானும் மாட்டன்!” என்றான் அவன்.

“உங்கள!!!!” என்று முறைத்தவள், அவன் எதிர்பாராத அந்த வேளையில் பட்டென்று தன் இதழ்களை அவன் கன்னத்தில் ஒற்றி எடுத்துவிட்டு, “இந்தளவுதான் தருவன். மரியாதையா நாளைக்கு வந்து சொல்றீங்க! இல்ல..” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள்.

அவன் சிரிக்கத் தொடங்கவும், “நடக்கிறதே வேற!” என்று மிரட்டிவிட்டு உள்ளே ஓடியேபோனாள்.

“மேம்” என்ற அழைப்பில் சட்டெனக் கண் விழித்தவள், முன்னே நின்ற விமானப் பணிப்பெண்ணைப் பார்த்து ஒருகணம் விழித்தாள்.

பிறகுதான் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறோம் என்று விளங்க, எழுந்த சிரிப்பை அடக்கியபடி அந்தப் பெண்ணை ஏறிட்டாள்.

உணவு கொண்டுவந்திருந்தாள்! தனக்கும் மகளுக்குமானதை வாங்கி, உண்டதும் சற்றுநேரம் முன்னிருந்த திரையில் சார்லி சாப்ளினை ஓடவிட்டாள். மனமோ அவரில் நிலைக்காமல் கணவனோடு அவள் சென்ற யாழ்ப்பாணப் பயணத்துக்கே ஓடியது!
 
Top Bottom