சிந்து என் மகள். இப்போதுதான் பதின்மூன்றாவது வயதில் காலடி எடுத்துவைத்து நான்கு மாதங்களாகி இருக்கிறது. எப்போதுமே எதையாவது செய்வதில் மிகவுமே பிரியம் கொண்டவர். அது நகச்சாயத்தில் துவங்கி மெஹந்தி போடுவது, வரைவது, வெட்டுவது கொத்துவது சமைப்பது, கேக் வகைகள் செய்வது, ஐசிங் போடுவது, மேக்கப் என்று அவர் தொட்டுச்செல்லும் இடங்கள் மிகவுமே அதிகம். அதோடு மெய்யாகவே அருமையாகவும் செய்வார். என்ன எனக்குத்தான் துப்பரவுத் தொழிலாளி வேலை வந்துவிடும். அது மட்டும் செய்வதில்லை. பேசிப்பேசி வீட்டை ஒதுக்கினாலுமே, போன், கேம் என்று இல்லாமல் இவற்றை அவர் செய்வதில் எனக்கும் விருப்பமுண்டு.
அவரின் ஆக்கங்களை இங்கே பகிர்ந்துகொள்ளும் ஆசையில் இந்தப் பகுதியை ஆரம்பித்து இருக்கிறேன். எப்படித்தான் தன்னடக்கம் இருந்தாலும் அம்மா என்று வருகையில் பெருமை பாடிவிடும் இல்லையா நம்முள்ளம். அப்படித்தான் என் மகளினதும் சிறப்புக்களை ஆசையோடு உங்களிடம் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன்.
என்னைப்போலவே உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் சிறப்பினைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால், என்னிடமோ ரோசி அக்காவிடமோ கேட்டால் அதற்கென்று ஒரு பகுதி தனியாக உங்களுக்கும் ஆரம்பித்துத் தர வெகு ஆர்வமாகவே உள்ளோம்.