• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 2

K sathiyabhama

New member
அவர்களிடமிருந்து வருகிற அளவுகளும், ஒவ்வொரு அளவிற்கும் எத்தனை உருப்படியில் ஆடைகள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்டரையும் கவனித்து, அதற்கு ஏற்ற வகையில் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய பெரிய மேசைகளில் பல அடுக்கில் துணிகளை விரித்து அடுக்கி, அதன் மேலே முன்னுடல், பின்னுடல், கை, கொலர் என்று இருக்கும் அளவுத் துண்டுகளை வரைந்து, அவ்வளவு பெரிய துணி அடுக்கினையும் ஒரே நேரத்தில் சீராக வெட்டும் மெஷினினால் வெட்டி, அந்தந்தத் துண்டுகளைக் கட்டித் தனித்தனியாக அடுத்த நிலைக்கு குழுவிடம் அனுப்ப என்று இன்னொரு குழு இருந்தது.

அப்படி வெட்டப்பட்ட துணிகள் அவர்கள் தொழிற்சாலையின் லோகோவைப் பிரிண்ட் பண்ணுவதற்கு முதலில் செல்லும். அதன் பிறகு கை, நெஞ்சுப் பகுதி, முதுகு என்று எங்காவது ஏதாவது டிசைன்கள் போடப்பட வேண்டுமாயின் அதற்குத் தகுந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட எம்ப்ரோடிங், பிரிண்டிங் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து நகரும் துணிகள் சீராக அயர்ன் செய்யப்பட்டு தைக்கும் பகுதிக்குச் செல்லும்.

அங்கே ஒவ்வொரு ஆடையும் எந்த வரிசையில் தைக்கப்பட வேண்டுமோ அந்த வரிசையில் அவரவர் அந்தந்த வேலையை மட்டுமே முடித்துக்கொடுக்க, ஒரு வட்டம்போல் சுழன்று வரும் துணி, கடைசியில் தனக்கான வடிவத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்டு ஒரு உடையாக மாறிப்போகும்.

அது கிளீனிங் பகுதிக்குச் சென்று, தேவையற்ற நூல்களோ, துணிகளோ அகற்றப்பட்டு, அளவு, போடப்பட்ட பிரிண்ட் முதற்கொண்டு தைக்கப்பட்ட பட்டன் வரை சரியாக இருக்கிறதா என்று ஆராயப்பட்டு திரும்பவும் அயர்ன் பண்ணும் பகுதிக்குச் செல்லும்.

அங்கே அயர்ன் செய்யப்பட்டு அளவு வாரியாகப் பிரித்து மடிக்கப்பட்டு பேக்கிங் ஆகி, விற்பனைக்குத் தயாராகும்.

இப்படித்தான் ஒரு துணி ஆடையாக வடிவம் கொள்வது. இந்தப் பகுதிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சென்றால் இருப்பது கொடவுன். அங்கே பனையளவு உயரத்திற்கும் மேலே, எவ்வளவு பெரிய பாரத்தையும் தாங்குமளவுக்கான ராக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தட்டு தட்டாகப் பிரிக்கப்பட்டு, இராட்சத ரோல்களாகச் சுற்றப்பட்டிருக்கும் துணி வகைகள், நூற்கண்டுகள், பட்டன்கள் டிசைன் ஓராயிரம், தைப்பதற்கு தேவையான இதர பொருள்கள் எல்லாமே மின்சார ஃபோர்க்லிஃப்ட்(electric forklift) மூலம் ஏற்றி அடுக்கப்பட்டிருந்தன.

அதையெல்லாம் பார்த்தபடி, அங்கே பணிபுரிந்தவர்கள் இன்முகத்தோடு சொல்லும் காலை நேரத்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு, அவளே நேரடியாகக் கவனிக்கையில் கண்ணில் படும் தவறுகளையும் குறைகளையும் பற்றி அந்தந்த இடத்திலேயே பேசித் தீர்த்துக்கொண்டு அந்தத் தொழிற்சாலையை மொத்தமாக அவள் சுற்றி முடிக்கையில் நெஞ்சம் விம்மித் தணியும். பெருமையும் நிமிர்வும் அவளறியாமலேயே அவளிற்குள் வந்துவிடும்.

அவளுக்கே இத்தனை தொந்தரவுகளும் துன்பங்களும் சறுக்கல்களும் ஏமாற்றங்களும் கிடைக்கிறது என்றால், வீட்டில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, முதலில் யாழ்ப்பாணத்திலே மூலப் பொருள்களை வாங்கித் தைத்துக்கொடுத்து, பிறகு தலைநகரிலிருந்து கொள்வனவு செய்யத் தொடங்கி, அதன் பிறகு இந்தியா முதற்கொண்டு ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் இறக்குமதி செய்கிற அளவிற்கு அவள் அப்பம்மா வளர்த்திருக்கிறார் என்றால் அவர் இதைப் போல எத்தனையைக் கடந்து வந்திருப்பார்?

அவர் அவளைப் போன்று சோர்ந்திருந்தால் இன்று தையல்நாயகி என்கிற இந்தத் தொழிற்சாலைதான் உருவாகியிருக்குமா, இல்லை அது இத்தனையாயிரம் பெண்களுக்கான வாழ்வாதாரத்திற்கு தூணாகத்தான் நின்றிருக்குமா?

அதைவிட அங்கிருக்கும் பல பெண்களின் கதை அவளுக்குத் தெரியும். அவர்களோடு ஒப்பிடுகையில் அவள் எதிர்கொள்பவை எல்லாம் ஒன்றுமேயில்லை. அடிப்படை வசதி மட்டுமல்ல அளவுக்கதிகமான வசதிகளும், வருமானமும் அவளிடம் உண்டு. அப்படியானவள் கலங்கி நிற்பதா? அதுவும் தையல்நாயகியின் பேத்தி உடைந்துபோவதா?

கூடவே கூடாது! இயல்பான தன் நிமிர்வுடன் அன்றைய நாளிற்கான தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

நாள்கள் நகர ஆரம்பித்தன. நிலன் முத்துமாணிக்கத்தின் கார்மெண்ட்ஸை பத்திரப்பதிவு செய்த செய்தி இவள் செவியையும் வந்து எட்டியிருந்தது.

அன்று வீடு வந்தவளை அழைத்தார் குணாளன்.

“அம்மாச்சி… அது… நிலனுக்கு உங்களத் திரும்பவும் கேட்டு விட்டிருக்கினம்மா.” என்றார் மகள் கோபப்படப்போகிறாள் என்று தெரிந்தே.

அதேபோல் அவளுக்கும் சட்டென்று சினம்தான் உண்டாயிற்று. “என்னப்பா இது அரியண்டம்? விருப்பமில்லை எண்டு சொல்லியாச்சே. பிறகும் என்ன?” என்றாள் எரிச்சலுடன்.

அந்தப் பக்கம் அவளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இந்தப் பக்கம் அவளைப் பெண் கேட்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரியம் என்று மனம் கொதித்தது அவளுக்கு.
“ஆனாம்மா நீயும் ஒருக்கா யோசிக்கலாமே பிள்ளை. எனக்கும் நிலனுக்கு உங்களக் குடுக்க விருப்பம்தான்.”

இது அவள் எதிர்பாராதது. அவரும் ஆசைப்படுகிற அளவிற்கு அவன் என்ன உலகத்திலேயே இல்லாத மாப்பிள்ளையா? “யோசிக்கிற அளவுக்கெல்லாம் பெறுமதியானவன் இல்லையப்பா அந்த நிலன். வேண்டாம் எண்டா வேண்டாம்தான்.”

“அப்படிச் சொல்லாதயம்மா. என்னதான் இண்டைக்கு நாங்களும் நல்ல வசதி வாய்ப்போட இருந்தாலும் அவே பாரம்பரியமான குடும்பம். அங்க நீ போனா எங்களுக்கும் பெருமைதானே.”

“என்ன கிழிஞ்ச பெருமை? முதல் அந்தளவுக்கு நாங்க எந்தப் பக்கத்தால் குறைஞ்சுபோனோம்?” முகம் கோபத்தில் சிவந்து கொதிக்கச் சீறினாள் இளவஞ்சி.

“அம்மாச்சி…”

“கதைக்காதீங்கப்பா. எப்ப இருந்தப்பா இப்பிடி அடுத்தவன்ற பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் ஆசைப்பட ஆரம்பிச்சனீங்க? நாங்களும் மூண்டாவது தலைமுறையா நிமிந்துதானேப்பா நிக்கிறம். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?”

“சரியம்மா. நான் கதைச்சது பிழையாவே இருக்கட்டும். நீங்க அந்தப் பெடியனைப் பற்றி மட்டும் யோசிங்கோ. அவர் நல்லவர்தானே. உங்களை மாதிரி உழைப்பில கெட்டிக்காரனும்.”

“அந்தக் கெட்டிக்காரனும் அவன்ர வீட்டு ஆக்களும் ஏத்துக்குப் பிளான் பண்ணினோம் எண்டு உங்களுக்கு விளங்கவே இல்லையாப்பா?” ஏளனமாக உதவு வளைய வினவினாள் அவள்.

“வாழ்க்கையோட தொழிலைத் தொடர்படுத்தக் கூடாதம்மா. வாழ்க்கை வேற. தொழில் வேற.”

“இதெல்லாம் மேடைப் பேச்சுக்கும் பேட்டி கொடுக்கவும் நல்லாருக்கும் அப்பா. ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு. ரெண்டுல எது பிழைச்சாலும் மற்றதும் சேந்துதான் பாதிக்கும்.” பட்டென்று சொன்னாள் பெண்.

“சரியம்மா. கோபதாபத்தை விட்டுப்போட்டு அப்பா சொல்லுற மாதிரியும் ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோவன். நீங்க ரெண்டு பேரும் ஒரே தொழில். ஒருத்தர் இன்னொருத்தருக்கு உதவியா இருக்கலாம். நாளைக்கு சேர்ந்தே நீங்க ரெண்டுபேரும் வளரலாம். குடும்பமும் நல்ல குடும்பம். இது வரைக்கும் அவரின்ர தம்பிதான் குழப்படி எண்டு கேள்விப்பட்டிருக்கிறனே தவிர இவரைப் பற்றி ஒரு குறையும் காதில விழுந்ததே இல்ல. இந்தக் காலத்தில இப்பிடி எல்லாம் பொருந்தி வாற சம்மந்தம் கிடைக்காதம்மா.” என்றவரை ஒன்றுமே சொல்லாமல் பார்த்தாள் இளவஞ்சி.

“என்னம்மா?”

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “அப்பம்மா இல்லை எண்டதும் எல்லாமே மறந்துபோச்சு என்னப்பா?” என்றாள் கசப்புடன்.

“சக்திவேலருக்கு முன்னால எந்த இடத்திலயும் நாங்க குறஞ்சு நிண்டுடவே கூடாது எண்டு அப்பம்மா சொல்லுவா, அத மறந்திட்டீங்களா அப்பா? இல்ல, என்னத்துக்கு திரும்ப திரும்ப என்னைக் கேக்கினம் எண்டுதான் விளங்கேல்லையா உங்களுக்கு? அவேக்குச் சமனா வளந்துகொண்டு வாறன் நான். என்னைக் கட்டி, பிறகு என்ர வாழ்க்கையை நடுவுக்க வச்சு தொழிலை ஒண்டு சேர்க்கிறன் எண்டு சொல்லி, தையல்நாயகிய இருந்த இடம் இல்லாம ஆக்குவினம். தேவையா இதெல்லாம்?”

“அதையெல்லாம் பேசி முடிவு செய்து கட்டுறதுதானேம்மா? அம்மா ஆரம்பிச்ச பாக்டரிய நனையும் அப்பிடி விட்டுட மாட்டனம்மா. அப்பாக்காக யோசிங்கோ செல்லம்.”

“ஆருக்காகவும் இதில யோசிக்க ஒண்டும் இல்லை அப்பா. எனக்கு விருப்பம் இல்ல. அவ்வளவுதான்.” என்றுவிட்டு அவள் எழுந்துகொள்ள, “அம்மா இருந்திருந்தா அம்மாவும் இதத்தானம்மா சொல்லியிருப்பா.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “கடைசி வந்தாலும் இல்லை அப்பா!” என்று சீறியிருந்தாள் அவள்.

“உங்களை விட அப்பம்மாவை, அவவின்ர மனதை, அதிலிருந்த கனவுகளை எனக்குத்தான் கூடத் தெரியும். நான் சொல்லுறன், அப்பம்மா அப்பிடிச் சொல்லவே மாட்டா!” என்றவளுக்கு அதற்குமேல் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பமே இல்லை.

அதில், “நீங்களா விருப்பமில்லை எண்டு சொல்லுறீங்களா, இல்லை அந்தச் சக்திவேலரிட்ட நானே சொல்லவா?” என்றாள் தந்தையைத் தீர்க்கமாகப் பார்த்து.

“இல்லை இல்ல! நானே சொல்லுறன்.” இன்னுமே எப்படியாவது இந்தத் திருமணத்தை நடந்துவிடமாட்டோமா என்கிற ஆசையில் இருந்தவர் மகளைத் தடுத்தார்.

தொடரும்…

லைக்கிட்டுக் கருத்திடும் அனைவருக்கும் நன்றி.
Very interesting ma
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom