நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
I admire the maturity of Vanji..... really good going Nitha sis“அப்பாவும் சேந்து உங்களைக் காயப்படுத்திப்போட்டன் எண்டு எனக்குத் தெரியும் பிள்ளை. ஆனாம்மா…” என்றவரால் தன் மனத்தில் உள்ளவற்றை சொல்ல முடியவில்லை. “நீங்க நல்லா இருந்திடோணும் குஞ்சு. அது மட்டும் தானம்மா இந்த அப்பான்ர ஆசை. அதுக்காகத்தானம்மா இந்தக் கலியாணம்.” என்றவரிடம் அவள் அப்போதும் பேசத் தயாராயில்லை.
தாய் தந்தையரை மிதுனோடு விழுந்து வணங்கிய சுவாதி, தகப்பனைக் கட்டிக்கொண்டு அழுது மன்னிப்பைக் கேட்டாள்.
மிச்ச சொச்சமாய் இருந்த அவள் மீதான குற்றம் குறைகள் எல்லாம் கரைந்துபோய்விட, அவளைத் தேற்றிக் கண்ணீரைத் துடைத்துவிட்டார் குணாளன்.
*****
நிலனின் அறையில் அவன் கட்டிலில் உறங்கமுடியாமல் புரண்டுகொண்டிருந்தாள் இளவஞ்சி. நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது. பக்கத்தில் படுத்திருந்த நிலனிடமிருந்து வந்துகொண்டிருந்த சீரான சுவாசம், அவன் நல்ல உறக்கத்தில் இருக்கிறான் என்று சொல்லிற்று.
இரண்டு தம்பதியரையும் ஒரே வீட்டில் வைக்க விரும்பாமல் யாரை எங்கே வைக்கலாம் என்கிற பேச்சு வருகையிலேயே தங்கள் வீட்டில் தாங்கள் இருந்துகொள்வதாகச் சுவாதி சொல்லியிருந்தாள்.
அவளுக்கு அங்குப் போக ஜானகி ஏதும் சொல்லிவிடுவாரோ என்று பயம். தமக்கையானால் எதையும் சமாளிப்பாள் என்று ஒரு நினைப்பு.
கடைசியில் அதுவே முடிவாகி இதோ அவள் அவன் அறையில். சந்திரமதி அவளிடம் மிகவும் பாசமாகவும் உள்ளன்போடும் நடந்துகொண்டார். தன் அறையில் அவளைச் சந்தித்த நிலனும் எதையும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
அவள் முகம் தாங்கி நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, “நிறைய யோசிக்காத. வாழ்க்கை போற போக்கிலயே நீயும் கொஞ்ச நாளைக்குப் போய்ப் பார். அதுவும் நல்லாத்தான் இருக்கும்.” என்றுவிட்டுப் படுத்துக்கொண்டான்.
இதோ அவள்தான் உள்ளத்தின் இரைச்சலுக்கு மத்தியில் உறங்கமுடியாமல் தன்னோடு தானே போராடிக்கொண்டிருக்கிறாள். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் போகவே மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்தாள்.
இரவு நேரத்துக்குக் குளிர் காற்று மேனியைச் சிலிர்க்க வைத்தது. கொஞ்ச நேரம் அப்படியே நின்றாள். அந்தக் குளிர் உடலை ஊடுருவியபோதும் உள்ளத்தினும் நுழைந்து அவளை அமைதிப்படுத்த முடியாமல் தோற்று நின்றது.
திரும்பவும் சத்தமில்லாமல் அறைக்குள் வந்து பார்த்தாள். அவள் பொருள்கள் அந்த அறையில் எங்கு இருக்கின்றன என்று அவளுக்குத் தெரியவில்லை. அந்த மெல்லிய இருட்டினுள் விழிகளைச் சுழற்றியவள் அங்கே தொங்கிக்கொண்டிருந்த அவனுடைய ஷர்ட்டை கண்டதும் அதை எடுத்துத் தன்னைச் சுற்றி போட்டுக்கொண்டு சென்று நின்றுகொண்டாள்.
சாய்ந்துகொள்ளத் தோள் வேண்டும் போலிருக்கக் கைகளைக் கட்டிக்கொண்டு பால்கனியின் பக்கச் சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.
எதையெதையோ எண்ணி ஊமையாக உள்ளே உள்ளம் அழுதுகொண்டே இருக்கிறது. அதைத் தேற்ற அவளிடமே வார்த்தைகள் இல்லை.
அவள் உள்ளத்தைப் போலவே இருண்டுபோய்க் கிடைக்கும் வானத்தையே பார்த்திருந்தாள். தினந்தோறும் வருகிற விடியல்கள் இந்த உலகத்துக்கானவை. உனக்கான விடியல் உன் விடாமுயற்சியில் மட்டுமே உண்டு என்பதை நம்புகிறவன் அவள்.
அப்படியானால் அவள் இன்னும் எதில் விடாமுயற்சியோடு இருக்க வேண்டும்?
அவளின் வேரைப் பற்றி அறிந்துகொள்வதிலா? அவள் இல்லற வாழ்விலா? இல்லை தொழிலிலா?
அப்போது பின்னால் வந்து மென்மையாய் அவளை அணைத்தான் நிலன். ஒரு நொடி அமைதியாக நின்றுவிட்டு, “உங்கட மனதில நான் இல்லாம எனக்குப் பக்கத்தில நீங்க வரக் கூடாது நிலன்.” என்றாள் உறுதியான குரலில்.
அவள் சொன்னதற்குப் பதில்போல் அவன் அணைப்பு இறுக, பின்புறக் கழுத்தோரத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் அவன்.
அவள் தடுக்கவும் இல்லை தள்ளிப்போகவும் இல்லை. தளர்ந்துகொடுக்கவும் இல்லை.
அணைப்பை இன்னுமே கொஞ்சம் இறுக்கி, அவள் தோளில் தாடையை வைத்து, “இஞ்ச என்ன செய்றாய்?” என்று பேச்சுக் கொடுத்தான்.
அவள் நின்ற நிலை மாறாமல் அப்படியே நின்றிருந்தாள்.
“நித்திரை வரேல்லையா?”
“...”
“புது இடம் எண்டுறதாலயா?”
எந்தக் கேள்விக்கும் பதில் இல்லாமல் போகவும் அவளைத் திருப்பி அந்த இருட்டில் அவள் முகம் பார்க்க முயன்றான். புதிதாக வகிட்டில் வைத்துக்கொண்ட குங்குமமும் கழுத்தில் மின்னிய தாலியும் அவளைப் பேரழகியாய்க் காட்டின.
“அடியேய் அழகி! என்னோட கோவமா இருக்கிறியா?” ஒற்றைக் கரத்தால் அவள் தாடையைத் தாங்கி.
அப்போதும் அவள் பதில் சொல்ல மறுக்க, அவள் நெற்றியில் தன் உதட்டினைப் பதித்துவிட்டு அப்படியே அவளை அள்ளிக்கொண்டான்.
பயந்துபோனாள் இளவஞ்சி. “என்ன செய்றீங்க? இறக்கி விடுங்க!” சத்தமில்லாமல் அவள் அதட்ட அவன் கேட்கவில்லை. அவளைக் கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தினான்.
அவளின் இரு புறமும் கைகளை ஊன்றி, “என்ர மனதில நீ இல்லாட்டி நான் பக்கத்தில வரக் கூடாது சரி! என்ர ஷேர்ட் உன்ர உடம்புக்கு வந்திருக்கே, அப்ப நான் உன்ர மனதில இருக்கிறனா?” என்றான் அவள் முகம் பார்த்து.
பார்வையாலேயே அவனை எரித்தவள், அணியாமல் தன்னைச் சுற்றி போட்டிருந்த சேர்ட்டை தன் முதுகுப் பக்கமிருந்து இழுத்து எடுத்து அவன் முகத்திலேயே தூக்கி எறிந்தாள்.
அவன் முகத்தில் பட்டுத் திரும்பவும் அவள் மீதே விழப்போனதை எடுத்து அந்தப் பக்கம் போட்டான். “மூக்குக்கு மேல வாற இந்தக் கோவத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல.” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு அவள் அருகில் தானும் சரிந்தான் நிலன்.
அவள் உடனேயே விலகிப் படுக்க அவன் தடுக்கவில்லை. ஆனால், “நான் விலகி இருக்கிறதால நீ என்ர மனதில இல்லை எண்டு நினைச்சிடாத. நீ இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளுறதுக்கான டைம்தான் இது.” என்றுவிட்டு விழிகளை மூடிக்கொண்டான்.
தொடரும்…
நாளைக்கு எபி வராது. வியாழன் வாறன் அடுத்த எபியோட.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.