• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செக்கப் சிவந்த வானம் - உஷாந்தி கெளதம்- இதழ் 6

ரோசி கஜன்

Administrator
Staff member
ஒரு காலத்தில் தன் இயக்கத்தால் கட்டிப்போட்டிருந்த மணிரத்னம் சமீப காலமாகத் தன்னை நிரூபிக்கப் போராடி வரும் காலத்தில் இறுதியாக வந்த அவரது திரைப்படம் தான் செக்கச் சிவந்த வானம்.

படம் பார்த்ததுமே, ‘மணி இஸ் பாக்’ கோஷங்கள் ட்விட்டர் முழுதும் தெறிக்க, மனதுக்குள் ஆஹா என்றிருந்தது; ஓரமாய்க் கொஞ்சம் பெருமிதமும். என்ன ஆனாலும் ஆதர்ச கலைஞன் தோற்பதை எவர் தான் விரும்புவார்? அடுத்த நாளே டிக்கட் புக் செய்தாயிற்று. ஏற்கனவே ரஹ்மானியா மோடில் இசை வேறு படத்தை நோக்கி இழுத்துக்கொண்டிருந்தது.

பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய், அரவிந்த சுவாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி ராவ், டயானா என நட்சத்திரப்பட்டாளமே படத்தில். டைட்டில் கார்டில் விஜய் சேதுபதியும் சிம்புவும் வர, விசில் அடித்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தோம்.

பிரகாஷ்ராஜ் ஒரு பெரிய டான். நான் சொன்னால் நீங்கள் கேட்கவேண்டும். அப்படித்தான் படத்திலும் ஒரு குரல் சொன்னது, நாங்கள் கேட்டுக்கொண்டோம். மற்றும்படிக்குப் படத்தில் அவர் டான் என்பதற்கான, அதுவும், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் டான் என்பதற்கான காட்சி விளக்கங்கள் இல்லை.

அடுத்து அரவிந்தசாமி, அவன் சின்ன முரட்டு டான். சரி மேலே சொல்லுங்க… அருண் விஜய் சதா துபாயில் ஷேக்குகளுடன் பிசினஸ் பேசிக்கொண்டே இருக்கிறார். சிம்பு செர்பியாவில் ஆயுதக்கடத்தல் செய்கிறார். சரி, இவர்கள் டான் பிரகாஷ்ராஜின் மூன்று மகன்கள். விஜய் சேதுபதி இவர்களுக்கு நண்பர்; அதே சமயம் போலீஸ். திடீரென்று டான் பிரகாஷ்ராஜ் இறந்து போக, திடுக் சம்பவங்கள் எல்லாம் சகோதரர்களின் வாழ்க்கையில் நடக்க ஆரம்பிக்கிறது. யார் காரணம்? அதெல்லாம் எப்படி முடிந்தது என்பது தான் கதை

படத்தில் சிம்புவும் விஜய் சேதுபதியும் உடல் மொழி மற்றும் நடிப்பில் பின்னியிருக்கும் அதே வேளை, அருண் விஜய்க்கு நடிப்பில் பின்ன எந்தப் பாயும் அங்கே இல்லாத காரணத்தால் உடல் மொழியில் மட்டும் கலக்கி இருக்கிறார். பின்னணி இசை வழக்கம் போல மிரட்டல், பாடல்களும் முக்கியமாக மழைக்குருவி, செவந்து போச்சு நெஞ்சே என்று படம் முடிந்த பின்னும் தாளமிட்டுக்கொண்டிருந்தன எங்கள் நெஞ்சில்.

சரி நன்றாகத்தானே இருக்கிறது? அப்படியானால் படத்தில் என்ன பிரச்சனை?

ஒரு திரைப்படம் என்றால் முதலில் பார்ப்பவனைத் தன்னோடு தொடர்புபடுத்தும் விதமாக ஒரு கதை சொல்லல், கதாப்பாத்திரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவுபடுத்தி அவனைப் பார்ப்பவனோடு தொடர்புபடுத்த வேண்டும்.


ஒரு திரைப்படம் என்றால் முதலில் பார்ப்பவனைத் தன்னோடு தொடர்புபடுத்தும் விதமாக ஒரு கதை சொல்லல், கதாப்பாத்திரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவுபடுத்தி அவனைப் பார்ப்பவனோடு தொடர்புபடுத்த வேண்டும். அப்படி இல்லாவிடில் திரையில் படம் தன்பாட்டில் ஓட, பார்வையாளன் தன் பாட்டில் அமர்ந்திருப்பான். இந்தத் திரைப்படத்திலும் அவன் அப்படிச் செய்கிறான் இவன் இப்படிச் செய்கிறான் என்று எல்லாம் வாய்வார்த்தையிலே சொல்கிறார்கள். ஆனால், எதுவுமே மனதில் படியவில்லை. பிரகாஷ்ராஜோ, அருண் விஜயோ, அரவிந்தசாமியோ, இல்லை சிம்புவோ யார் செத்துப்போயிருந்தாலும் பார்வையாளன் ஆஹா சுட்டது யார் என்று தான் பார்த்திருப்பான் எந்தப் பாதிப்பும் இல்லாமலே

படத்தில் வெளித்தோற்றத்திலும் மானரிசங்களிலும் கதாப்பாத்திரங்களை அவ்வளவு நுணுக்கமாக வடித்திருக்கிறார் மணிரத்னம். உதாரணம் சிம்பு, அருண்விஜய், அதிதி. ஆனால் யாருமே ஒரு கதாப்பாத்திரமாக நினைவில் நிற்கக் கூடியவர்கள் அல்ல. ட்ரென்டியாக இருக்கிறார்கள், அவ்வளவுதான். யாரோ நான்கு பேர் அடித்துக்கொள்கிறார்கள், கொஞ்சம் பொறு என்ன நடக்கிறது பார்ப்போம் என்ற மனநிலை தான் எனக்கு வந்திருந்தது.


1545518539387.png


அப்பாவோடு கூடவே இருந்த அரவிந்தசாமி அப்பாவின் ஆதிக்கத்தில் சுயம் இல்லாமல் ஒடுக்கப்படுவதால் மனம் வெறுத்துப்போவது தான் கதையின் முக்கியமான அடிநாதம். இதைப் பார்வையாளன் புரிந்து கொண்டால் தான் அதிதியை ஏன் இன்னொரு தொடர்பாக வைத்திருக்கிறார், அவரது நடவடிக்கைகளுக்குக் காரணம் என்ன என்றெல்லாம் புரியும். அவர்மேல் அனுதாபமோ கோபமோ ஏதாவது வரும். இங்கே அப்படியெல்லாம் குறியீடாகக் கூடக் காண்பிக்கவே இல்லை. ஆனால் ஏதோ ஒரு காட்சியில், அரவிந்த சாமி வாய்வார்த்தையில் சொல்லிக் கோபப்படுவது போல காண்பிக்கப்படுகிறது, அவ்வளவு தான். ஆகவே, பார்ப்பவன் மனம் அரவிந்த சாமியோடு ஒட்டவில்லை. யாரோ ஒருவனாகத் தான் இருக்கிறார்.

அரவிந்த சாமி மனைவியாக ஜோதிகா படம் முழுவதும் வருகிறார்; ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவே இல்லை. கணவரின் இன்னொரு பெண் தொடர்பை நேரில் கண்டும் சாதாரணமாக அதைக் கணவருக்கு ஜோக் போல மென்மையாகக் குத்திக்காட்டிக் கடந்து விடுகிறார். தன் அப்பா இறந்த போது மட்டும் தனக்கு வந்தால் ரத்தம் கணக்கில் பொங்குவது… கணவன் அவன் சகோதரர்களையே கொல்வதை ‘நான் சொன்னால் கேட்க மாட்டாய்’ என்று அப்படியே கடப்பது… ஒரு வேளை கொலை இரத்தம் என்று அதற்குள்ளேயே வாழ்ந்த பெண்கள் எதையும் கண்டு கொள்ளாமல் அப்படித்தான் இருப்பார்களோ என்னவோ! ஆனாலும், சுயமரியாதை ஒன்று கூடவா இருக்காது?

அதிதி ராவோ ஹிதாரி! இவருக்கும் அரவிந்த சாமிக்கும் நடுவில் ஒரு முறையற்ற உறவு. அவர் ஒரு பத்திரிகையாளர், சரி படத்தில் இவரால் ஏதும் துரும்பு பெயரும் என்று பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி அரவிந்தசாமியின் மீன்குழம்பைச் சாப்பிடுவதோடு இவர் கடமை முடிந்துவிடிகிறது. படத்தில் இவர் எதற்கு?

ஐஸ்வர்யா ராஜேஷ், அவரும் கணவர் அருண் விஜயின் ப்ளேபாய் தனங்களைச் செல்லக்கோபத்துடன் கடந்து விடுகிறார். அவ்வளவுதான். அதில் அவர் இலங்கைத் தமிழ் பேசுவதெல்லாம் நோ கமன்ட்ஸ். அவருக்கும் பெரிதாக ஸ்கோர் செய்யும் வாய்ப்புக்கள் கிடையாது.

என்ன தான் இந்த மூன்று மகன் டான்களும் ப்ளேபாயாக இருந்தாலும் இறுதியில் மனைவியிடம் தான் உயிராக இருக்கிறார்கள் என்று அண்டர்லைன்ட் மெசேஜ் வருகிறது. அவர்களுக்கு ஒன்றென்றால் தாங்க முடிவதில்லை. எப்படி வேண்டுமானாலும் பழி வாங்குவார்கள். எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள் இவர்கள் எல்லாம்?

முதல் பாதியில் திருப்பங்களோடு பரபரப்பாக சென்ற படம் இரண்டாம் பாதி, ஊகிக்க கூடிய திரைக்கதை அரதப்பழசான க்ளைமாக்ஸ் என நொண்டியடிக்கிறது. இந்தப் படத்தில் ஆஸ்கார் இசையமைப்பாளர், காமராவில் கவிதை எழுதும் ஒளிப்பதிவாளர், அசால்ட்டாக நடிக்கும் நடிப்புக்கு ஏற்கனவே பெயர்போன நடிகர்கள் எல்லாருமே ஸ்கோர் செய்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் மட்டுமே ஸ்கோர் செய்கிறார்கள். அவர்களால் மட்டுமே படத்தைப் பார்க்க வைக்கவும் முடிந்தது. ஆனால், மணிரத்னம் மட்டும் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லாமல் ஓரிரு காட்சிகளைத் தவிர அப்படியே தேங்கி நின்று விடுகிறார்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom