• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சிறுமி வேடத்தில் சிரிக்கும் தண்டனை - ரோசி கஜன்

ரோசி கஜன்

Administrator
Staff member
சிறுமி வேடத்தில் சிரிக்கும் தண்டனை


உச்சிப் பொழுது!

கடும் வெயில். கால்கள் உடலைத் தாங்க இயலாது வளைந்து தள்ளாடித் தளர்ந்தன. உடல் ஓய்வை யாசித்தது. கூடவே, பசியில் காந்திய வயிரோ, ‘கெதியாப் போய் இரை எதையாவது தேடேன்.’ என்று கட்டளை இட்டது.

மிகவும் முயன்று மெல்ல மெல்ல முன்னேறியது, அந்த ஓநாய்.

அப்பொழுது எதிர்புறம் ஏதோ சத்தம் கேட்டது.

சடக்கென்று நடை நிற்க, உடல் விறைப்போடு நிமிர்ந்தது. காதுகளைக் கூர்மையாக்கி உற்றுக் கேட்டது ஓநாய்.

“ஆரோ நடந்து வரும் ஒலி போலுள்ளதே!” முணுமுணுத்துக்கொண்டது. மெல்ல ஒரு மரத்தின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டது. மூச்சைக் கூட அடக்க ஒடுக்கமாகத்தான் விட்டது. வருவது யாரோ, எதுவோ! எக்காரணம் கொண்டும் தன்னை வெளிப்படுத்திவிடக் கூடாதே !

மெல்ல மெல்ல தலையை மட்டுமாக நீட்டி எட்டிப் பார்த்தது.

கண்கள் இரண்டும் அப்படி விரிந்தன. அங்கே, ஒரு சிறுமி கையில் பழக் கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். ஓநாயின் நாக்கில் எச்சில் எக்கச்சக்கமாக ஊறத் தொடங்கியிருந்தது. ‘அருமை அருமை! எனக்கு உணவு வருகிறது!’ மகிழ்ச்சியோடு கண்களில் புத்தொளி. எப்படியாவது வருவதை இரையாக்கியே தீருவேன் என்று மனத்தில் சங்கல்பம் பூண்டுகொண்டது ஓநாய்.

உவகையில் உள்ளம் துள்ள, மூளை சுறுசுறுப்பானது. தந்திரமான திட்டங்கள் அங்கு அணிவகுக்கத் தொடங்கியிருந்தன.

சர்ரென்று பசியுணர்வு அதிகரித்திட்டு. சிறுமிதானே என்ற அலட்சியமும் சேர்ந்துகொண்டது. ‘மனித மாமிசம் சாப்பிட்டு எத்தின நாள்களாச்சி!’ என்ற எண்ணம் துள்ள, திடுமென்று பாய்ந்து அச்சிறுமியின் முன் போய் நிமிர்ந்து நின்றது.

அவள் மிரண்டாள். ஆனாலும் துணிச்சல் மிக்கவள் போலும். இல்லையேல் தனியாக இந்த வனத்துக்குள் வருவாளா என்ன? சுதாரித்துவிட்டாள். அவள் விழிகளில் நகைப்பிருந்ததோ! அவை தன்னை உற்றுப் பார்ப்பதாகப்பட்டது ஓநாய்க்கு. அவள் சிறிய தோற்றம் பெரிதாகப் பொருட்படுத்தவிடவில்லை. உடலைச் சிலிர்த்துத் தொண்டையைக் கணைத்துவிட்டு வாயைத் திறந்தது.

“குட்டிம்மா … ஆர் நீங்க, எங்க இந்தப் பக்கமாப் போறீங்க? அதும் இந்த நட்டநடு வெயிலுக்கத் தட்டந்தனியா?” தேனொழுகக் கேட்டது.

“நான் பக்கத்து ஊர் ஓநாயாரே. என்ர தம்பிய என்னோட விட்டுட்டு அம்மா வேலைக்குப் போய்ட்டா. அவனுக்குப் பசிக்கிதாம். எனக்கும்தான்.” உதடுகளைப் பிதுக்கினாள். பார்த்து நின்ற ஒநாய்க்குத்தான் வாயில் எச்சில் ஊறியது. “அதான் பழங்கள் பறிச்சுக்கொண்டு போகலாம் எண்டு வந்தனான்.” என்றாள்,சிறுமி. கவலையாகத் தன் கையில் இருந்த கூடையை வேறு பார்த்தாள். அதில் இரு சிறு நாவல் பழங்கள் மட்டுமே இருந்தன.

“அப்பிடியா? இந்தப் பக்கம் பழங்கள் அவ்வளவாக இல்லையே செல்லம்.” என்று, அவள் கூடையை எட்டிப் பார்ப்பதுபோல் சற்றே நெருங்கியது. அவள் ஓரடி பின்னால் வைத்தாள்.

“அச்சச்சோ குட்டிம்மா! என்னைப் பாத்துப் பயப்படுறீங்களா? என்னால உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது செல்லம். உங்களுக்கு ஒண்டு தெரியுமா, நான் இந்தக் காட்டில வளந்தவன் இல்ல. ஒரு இளம்பெண்தான் அநாதரவா, உடலெல்லாம் புண்களோடு மழைக்குளிருக்குள்ள கிடந்த என்னை எடுத்துத் தன் வீட்டில் வைத்து வளத்தவா. அதனால எப்பவும் மனிதர்களுக்கு நான் நல்லது மட்டும்தான் செய்வன். அவா இப்ப இறந்திட்டா. அந்தக் கவலையிலதான் நான் காட்டுக்குள்ளச் சுத்திக்கொண்டு இருக்கிறன்.” என்னைப்போய் நீ தவறாக நினைக்கலாமா என்ற வகையில் முகத்தில் சோகம் காட்டிக் கதைத்தது.

“உண்மையாவோ!” விழிகள் விரித்து ஆச்சரியப்பட்டாள், சிறுமி.

“பொய் சொல்லுவனா, அதுவும் உன்னைப்போன்ற சின்னவர்களிடம் போய்? இந்தக் காடு பொல்லாதது செல்லம். என்னோட வா. நிறையப் பழங்கள் இருக்கிற மரத்தக் காட்டுறன். பிறகு உன்ன வீட்டில விட்டால்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.” என்றதும் தலையாட்டினாள் சிறுமி. அதனருகில் வந்து சலசலத்தபடி நடக்க ஆரம்பித்தாள்.

ஓநாயின் கடைக்கண் அடிக்கடி அவள் பக்கவாட்டுத் தோற்றத்தை வருடியது. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வேறு வந்துவிட்டார்கள். சுவாரசியமாகக் கதைத்துக்கொண்டு வந்ததில் இதையெல்லாம் சிறுமி கவனிக்கவில்லை என்று நிம்மதியாக நினைத்துக்கொண்டது, ஓநாய் .

கழிந்த ஒரு ஒரு நொடியும் தந்திர ஓநாய் மனத்துள் உருண்டு பிரண்டு நகைத்தது. ஓநாயால் இதற்கு மேலும் நடக்க இயலவில்லை. அதுவும் இரையை அருகண்மையில் வைத்துக்கொண்டு காலதாமதம் ஏனாம்?

“எங்க இன்னும் பழ மரத்தைக் காணேல்ல?” சிறுமிக்கும் அப்போதுதான் இதைக் கேட்கத் தோன்றியது போலும். அப்பாவியாகக் கேட்டபடி சுற்றிச் சுழன்று பார்த்தவளைப் பார்த்து எக்காளச் சிரிப்புச் சிரித்தது ஓநாய்.

சிறுமி அதிர்ந்தாள். “ஏன்… ஏன் இப்பிடி அரக்கன் போல சிரிக்கிற? நீ நல்லவன்தானே? உன்னப் பராமரித்து உண்ண உணவு தந்த அந்த இளம்பெண் உனக்கு நல்ல பண்புகளைத்தானே சொல்லித் தந்திருப்பாள்? அவள் போலவே நானும் உன்னை, உன்ர கதை பேச்சை நம்பித்தானே காட்டுக்குள் இவ்வளவு உள்ள வந்தனான்.” என்று, பயத்தில் ஆரம்பித்த சிறுமி விழிகள் இடுங்கக் கோபத்தோடு அதட்டினாள்.

ஓநாயோ காதுகளைக் குடைந்துகொண்டது. “நீ கனக்கக் கதைக்கிற குட்டிச்சாத்தானே! இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு இரையாகப் போவதா இன்னும் உனக்கு விளங்கேல்ல?” என்றபடி, உக்கிரமான அரக்கச் சிரிப்போடு அவளை நெருங்கியது. கையிலிருந்த பழக்கூடையை பறித்து வீசியெறிந்துவிட்டு ஆசையோடு அவள் உடலில் கை வைக்க முனைந்தது.

சரேலென்று இலாவகமாகத் துள்ளிப் பின்னால் நகர்ந்தாள் அச்சிறுமி. கண்ணிமைப்பொழுதில் அவள் நின்ற நிலை கராட்டியில் கைதேர்ந்தவள் என்று சொல்லிற்று. பார்வையில், இலேசாக உராய்ந்தால் போதும் குத்திக் கிழித்துவிடும் கத்தியின் கூர்மை.

இரையைப் புசித்து மகிழும் ஆசை வெறியில் நெருங்கிய ஓநாய் உண்மையில் திடுக்கிட்டுப் போனது. ஆனாலும் தனக்குத் தோல்வியா? தந்திரத்துக்குச் சவாலாக ஒரு தந்திரமா? அதுவும் இந்தக் குட்டிச்சாத்தான்?

இவளை வதைத்துப் புசிக்க வேண்டும். கோர எண்ணத்தோடு அவளை நோக்கிப் பாய்ந்தது.

அதேநேரம் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது .

அவர்களைச் சுற்றி மனிதக் கும்பல். எல்லோர் கைகளிலும் கூரான ஆயுதங்கள். விழிகளில், உடல்மொழியில் அந்த ஒநாயையை வதைத்தொழிக்கும் வன்மம்.

“ஆரும் நெருங்க வேணாம். நானே பாத்துக் கொள்ளுறன்.” கணீரென்று கட்டளையிட்டாள், சிறுமி.

“என்ன உனக்குத் தெரிய வாய்ப்பில்ல ஓநாயே!” என்றவள், தன் முதுகில் இருந்து எடுத்த கத்தியை உதறினாள். வாளாக நீண்டிட்டு. கண்ணிமைப்பொழுதில் ஓநாயின் முகத்திரையைக் கிழித்தாள். ஒரே இழுவையாக உடலைப் போர்த்தியிருந்த ஓநாய் ஆடை கிழிந்தது. உள்ளே, அச்சம் அப்பிய விழிகளோடு இருந்தான், அந்தக் கயவன். அவன் முகத்திலிருந்து நேர் கோடாக இரத்தம் சொட்டியது.

அவனைக் கதற கதற கொன்றுவிடும்படியான கோசம் எழுந்தது.

“பூரணிய நினைவிருக்கிறதா நாயே?” கேட்டுக்கொண்டே அவன் கரத்தில் ஒன்று போட்டாள் . அது துண்டாகித் துடித்து விழுந்தது.

“உன் குணக்கேட்டை எல்லாம் மறைத்து நல்லவனாக அப்பாவியாகத் தந்திரமாக நடித்துக் காதலிப்பதாகப் பொய் சொல்லிக் கடைசியில் அவளை என்ன செய்தனீ?” ஓநாயின் மறு கரம் தெறித்து விழுந்தது. அவனுடலோடு சேர்ந்து நிலமும் செம்மையைப் பூசியது.

வீழ்ந்து புரண்டுக் கதறினான், அவன், சடோபன். இருபத்தியெட்டு வயதுதான். அதற்குள் ஆறு கல்யாணம். காதலுக்குக் கணக்கில்லை. காதல் என்ற சொல்லுக்கு அவன் அகராதியில் கருத்தே வேறு. அந்தக் காதல் கற்பழிக்கும். அதற்கும் கணக்கில்லை. அவன் சுயரூபம் தெரியாது ஏமாந்த பெண்கள் தம்மையும் சொத்தையும் சொந்தங்களையும் இழந்து உயிர்தப்பிவிட்டிருந்தார்கள். சிலர் குழந்தைகளோடு. பூரணியோடு சேர்த்து இன்னும் இருவர் அவன் சுயரூபத்தைக் கண்டுகொண்டார்கள். அவனைத் தண்டிக்கத் துணிந்தார்கள். வதைத்துச் சாம்பலாக்கி விட்டான். பூரணிக்குச் சமாதி இந்தக் காட்டுக்குள்தான். சிறிது காலம் தலைமறைவாக இங்கே சுற்றிக்கொண்டு இருக்கிறான். அடுத்த இடமும் பெண்ணும் தேட எடுத்துக்கொள்ளும் காலம் இது.

“பூரணி என்ர ஒரே சித்தி! உன்னப்பற்றித் தெரிஞ்சோன்ன எங்களிட்டச் சொல்லிட்டா. நாங்க வர முதல் நீ அவவை… ” அவன் நடு நெஞ்சில் கத்தி சொருகி நின்றது.

சிறுமிக்குப் பதினாறு வயதுதான். பார்த்தால் பத்து என்றுதான் மதிப்பார்கள். தாயும் தந்தையும் காவல் உயர் அதிகாரிகள். சிறுவயதிலிருந்தே, சடோபன் போன்றவர்கள் பற்றிய விழிப்புணர்வை அவளுள் ஏற்படுதியதே பூரணிதான். கடைசியில் அவளே இரையாகிவிட்டாள்.

சிறுமியின் தாயும் தந்தையும் அப்போதுதான் விசயமறிந்து ஓடி வந்தார்கள். “என்ன வேலை செய்திட்ட கவி நீ?” மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறித்துடித்தார்கள்.

“உங்கட மகள் தெய்வம். தீமைக்கு எதிரான துணிவும் உரமும் கொண்டவள். எங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணம். இது அழுகிற நேரம் இல்ல. இவனத் தண்டித்தது இந்த ஊர். எங்களுக்காக அத்தூரமிருந்து சேவை செய்ய வந்த பூரணி டீச்சருக்கு நாங்கள் செலுத்தும் காணிக்கை இவன் உயிர் வதை!” கண்ணீரோடு சொன்னாள் அந்த ஊரின் தலைவர் மனைவி. பெண்களும் ஆண்களும் வேறுபாடின்றி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
 

Goms

Active member
அருமை. இன்றைய காலத்தில் சடகோபனைப் போன்றோரை சமாளிக்க அனைத்து பெண்களுக்கும் சிறு வயதிலிருந்தே விழிப்புணர்வு கொண்டு வருவது அவசியம் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க.
 
Top Bottom