• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சிந்துவிடம் மாட்டிக்கொண்டு முழித்தது :cry::cry:

நிதனிபிரபு

Administrator
Staff member
மகன் லைசென்ஸ் எடுத்ததில் இருந்து அண்ணாவும் தங்கையும் தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டுக்குத் தேவையான சாப்பாட்டுச் சாமான்கள் வாங்குவதற்கு போவது வழக்கம்.

பிள்ளைகள் பணத்தை பொறுப்பாகக் கையாண்டு பழகவேண்டும் என்று எப்போதும் நான் நினைப்பது உண்டு. எதற்குமே வெளியில் விடாமல் வைத்திருந்துவிட்டு, அவர்கள் அதைச் செய்யவில்லை, பொறுப்பில்லை என்று நாம் புலம்புவதில் அர்த்தம் இல்லை தானே.

அதைவிட, அண்ணாவும் தங்கையுமாக தயாராகி, சென்று, பொருட்களை வாங்கிவந்து என்று ஒவ்வொரு சனியும் அவர்கள் இருவரும் இணைந்து செய்யும் ஒரு காரியமாக அது அமையும். கூடவே, இருவருமாக கதைக்க, சிரிக்க ஏன் சண்டை கூட பிடிக்க ஏதோ ஒன்று இருவருக்குமானதாக கிடைக்குமே.

முதல் முதலாக அப்படி ஒரு சனிக்கிழமை அனுப்பிவைத்தபோது, ஒரு மாதத்துக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு வாரத்துக்கானதை வாங்கி வந்தார்கள். உண்மையில் எனக்கு நெஞ்சுவலி வராத குறைதான். ஆளாளுக்கு இஷ்டத்துக்கு தமக்குப் பிடித்ததை விலையே பார்க்காமல் வாங்கி இருந்தார்கள்.

உண்மையில் கொஞ்சம் கோபம் வந்தது. என்ன இந்தப் பிள்ளைகள், விலை பார்த்து வாங்க மாட்டார்களா என்கிற கேள்வியும் வந்தது. பிறகு வாங்கிய பில்லை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பொருளாக எடுத்து இது வாங்கியிருக்கத் தேவை இல்லை; இதில் விலை குறைந்ததும் உண்டு; ஒரு வாரத்துக்கு இவ்வளவு காசைக் கொடுத்தால் ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலவு என்று கணக்குப் பாத்தீங்களா என்று ஒரு விளக்கம் மாதிரி சொன்னபோது அவர்களுக்குத் தம்மை நினைத்தே பெரும் சிரிப்பு. அதோடு தவறையும் கொஞ்சம் புரிந்துகொண்டார்கள்.

அடுத்தவாரம் என்ன செய்தேன், அளவான பணத்தை கொடுத்து, இதற்குள் தான் இந்த வாரத்துக்கானதை நீங்க வாங்கி வரவேண்டும் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

கணக்குப் பாராமல் பொருட்களை எடுத்தால், கவுண்டரில் கொடுப்பதற்கு பணம் இல்லாது போனால் எடுத்த பொருட்களை திருப்பிக் கொடுக்கவேண்டி வரும் என்றும் சொல்லிவிட்டேன்.

அண்ணனும் தங்கையும் பயத்தில் ஒவ்வொரு பொருளின் விலையையும் கவனித்து, போனில் கால்குலேட்டரில் கணக்குப் பார்த்து கச்சிதமாக வாங்கி வந்தார்கள். அதன்பிறகு, இருவரும் நல்ல திருத்தம். போகும்போதே லிஸ்ட் கொண்டு போவார்கள். அதைத் தாண்டி வேறு எதுவாவது விரும்பினால் வாங்கவா அம்மா என்று அழைத்துக் கேட்பார்கள்.

இதைவிட முக்கியமான ஒன்று, மகளாவது என்னுடன் வருகையில் பொருட்களை பார்த்து வாங்குவார். தம்பி எப்போதுமே வண்டிலை தள்ளும் வேலையை மாத்திரமே பார்ப்பார். மிஞ்சிப் போனால், அவருக்குப் பிடித்த சொக்லெட்ஸ், சிப்ஸ் வகையறாக்கள் எங்கே உண்டு என்பதை மாத்திரம் தெரிந்து வைத்திருப்பார். அதைத்தாண்டி, சீனி, உப்பு, எண்ணெய், மா போன்ற அவரின் அனாவசியப் பொருட்கள் எங்கு உண்டு என்று அவருக்குத் தெரியாது.

முதல் இரண்டு மூன்று முறைகள் போகும்போது அவருக்கு பெரிதாக பொருட்களின் விலையும் தெரியாது; எது எங்கு இருக்கிறது என்றும் தெரியாது. அம்மாவோ அப்பாவோ முன்னின்று செய்கையில் அவற்றை எல்லாம் பெரிதாகக் கவனிக்க மாட்டார்கள் தானே. ஆனால், இப்போது எங்கள் ஊரின் சூப்பர் மார்க்கெட்டில் எந்தப் பொருள் எங்கே உண்டு என்று தம்பியை கேட்டால் போதும். அந்தளவு மாற்றம்.

இப்போதும் சிலநேரங்களில் சில குளறுபடிகள் நடக்கும் தான். ஆனால், எல்லாமே காலப்போக்கில் மாறிவிடும். நாமே இன்னுமே பல அரைவேக்காட்டு வேலைகளை பார்ப்போம். அப்படி இருக்கையில் தட்டியதும் எரியும் விளக்கைப் போன்று பிள்ளைகள் மிகச் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதும் சரியானது அல்ல தானே.

இப்படி போய்க்கொண்டிருந்த எங்களின் வாழ்க்கையில் விதி விளையாடியது போன சனிக்கிழமை.

தம்பியின் நண்பருக்கு பிறந்தநாள் என்று அவர் போய்விட்டார். அதனால் நிறைய நாட்களுக்குப் பிறகு அம்மாவும் மகளும் கடைக்குச் செல்லும் நிலை உருவாகிற்று. சரி என்று புறப்பட்டாயிற்று.

நாங்கள் வண்டிலோடு தேவையானவற்றை எடுத்து வைத்தபடி சூப்பர் மார்கெட்டுக்குள் நகர்ந்துகொண்டு இருந்தோம். எங்களைப் போலவே இன்னொரு அம்மாவும் மகளும். அந்த மகளுக்கு மிஞ்சிப் போனால் 7 வயது இருக்கலாம்.

கோழி இருக்கும் ஏரியாவுக்கு இரு சாராரும் வந்திருந்தோம். கோழியின் கால்கள் தனியாக செட்டைகள் தனியாக தசைப்பகுதிகள் தனியாக என்று ஒவ்வொரு பெட்டிகளுக்குள்ளும் அடைத்து விற்பார்கள். அதிலும், எதுவும் பிரட்டாத ஒரு வகை, உப்பு, தூள், மிளகு என்று மாரினேட் செய்த பகுதி என்று இரண்டு வகையாக இருக்கும். நமக்கானதை நாம் எடுத்துக்கொண்டோம். அந்த மகள் மாரினேட் செய்த கோழியின் செட்டைகள் அடங்கிய பெட்டியை எடுக்க, அந்த அம்மாவோ அது வேண்டாம் எதுவும் போடாதது எடு என்றார்.

அவள் இல்லை எனக்கு இதுதான் இன்று மத்தியானத்துக்கு வேண்டும் என்றாள். அம்மாவும், அது வேண்டாம் இதை எடு என்று இரண்டு முறை சொல்லிப்பார்த்தார். அவள் கேட்பதாக இல்லை என்றதும், கடைசியில், இதை எடுத்தால் மத்தியானத்துக்கு உனக்கு இதை சமைத்துத் தருவேன். இல்லையானால் உனக்கு இன்று கோழி இல்லை என்றுவிட்டு நகர்ந்துவிட்டார்.

அவளோ முகத்தை தூக்கிக்கொண்டு, கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு அன்னைக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றுகொண்டாள். அன்னை பொருட்படுத்தவும் இல்லை, கோபப்படவும் இல்லை, தன்னைச் சுற்றி ஆட்கள் நிற்கிறார்கள் என்று பார்க்கவும் இல்லை. மிக அமைதியாக அடுத்தடுத்து தனக்குத் தேவையானவற்றைப் பார்த்து எடுத்து வண்டிலுக்குள் போட்டபடி நகர்ந்துகொண்டே இருந்தார். பிறகும், நின்ற அந்த இடத்திலேயே நின்று, 'அம்மா, எனக்கு இதுதான் வேண்டும்' என்று சிணுங்கினாள் சின்னவள். அப்போதும் அன்னை பொருட்படுத்தவில்லை.

எனக்கு இப்போது கடைசியாக என்ன நடக்கும் என்று அறியவேண்டி இருந்தது. எங்கு சென்றாலும் அவர்கள் மீது என் கவனம் இருந்துகொண்டே இருந்தது. சிந்துவின் கவனமும் தான். கடைசியில் மகளே அன்னை சொன்ன மாரினேட் செய்யாத கோழிச்செட்டைகளை கொண்டுவந்து வண்டிலுக்குள் வைத்தாள்.

இப்போது, இந்த அம்மா மகள் இருவரின் முகத்திலும் சிறு புன்னகை. முதலில் சின்னவள் பாவமே என்று எனக்குள் தோன்றியது உண்மை. பிறகு, அவளின் பிடிவாத குணத்தை சத்தமே இல்லாமல் தகர்த்துவிட்ட அன்னையின் செய்கை மெச்சிக்கொள்ளத் தோன்றியது. "பாத்தீங்களாம்மா நடந்தத. அந்த அம்மா செய்ததுதான் சரி." என்று சிந்துவிடம் சொல்லிவிட்டு, பொருட்களை வாங்கிக்கொண்டு அந்தக் கடையை விட்டு வெளியேறியாயிற்று.

இப்போது அடுத்த கடை. அங்கேதான் பேக்கிங்குக்குத் தேவையான தரமான பொருட்கள் கிடைக்கும். சிந்துவுக்கு சமையல், பேக்கிங் போன்றவை என்றால் மிக மிக பிடிக்கும். போனதுமே பேக்கிங் ஏரியாவுக்கு ஓடிவிட்டார் சிந்து. எனக்கு அதுவே மெல்லிய கோபம். எனக்குத் தேவையானவற்றை நான் எடுத்துக்கொண்டு வரும் வழியில் நின்ற சிந்து, "அம்மா, இத நான் எடுக்கவா? நாளைக்கு பேக் பண்ணலாம்." என்று எதையோ காட்டி கேட்டார். எனக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது.

"சும்மா எப்ப பாத்தாலும் ஏதாவது ஒரு கேக்கை செய்துகொண்டு. ஒண்டும் வேண்டாம்! பேசாம வாங்கோ!" என்று அதட்டிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

பார்த்தால், என்னுடன் சிந்துவை காணோம். திரும்பிப் பார்த்தால், கைகளைக் கட்டிக்கொண்டு எனக்கு முதுகு காட்டித் திரும்பி நின்று இருந்தார் 17 வயதுக் குமரி.

கோபம் போய் சிரிப்பு வந்துவிட்டது எனக்கு. பின்னால் சென்று அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, "சரி சரி, விருப்பமானதை எடுத்துக்கொண்டு வாங்கோ." என்றுவிட்டு நான் நடக்க, "இப்ப என்னம்மா செய்தனீங்க?" என்று சிரித்துக்கொண்டு கேட்டா சிந்து.

"என்ன செய்தனான்? அதுதான் விருப்பமானதை வாங்கச் சொல்லிட்டன் தானே." என்றேன் நான்.

"அந்தக் கடைல வச்சு சொன்னீங்க, அந்தப் பிள்ளை பிடிவாதம் பிடிச்சது பிழை. அம்மா செய்ததுதான் சரி எண்டு. அப்ப இப்ப நீங்க செய்தது சரியா?" என்று கேட்டா அவா.

சொன்னா நம்புவீர்களா தெரியாது, எனக்கு ஒருமுறை திக் என்றது. சத்தியமாக என்ன பதிலைச் சொல்ல என்று தெரியவில்லை.

நான் செய்தது பிழைதான். இன்னொருவருக்கு தீர்ப்புச் சொன்ன நான் என் வீட்டில் என்ன செய்திருக்கிறேன்? இதற்கு கடைசியில் சிந்து வழங்கிய தீர்ப்புத்தான் எனக்கான மிகப்பெரிய அவமானம்.

"அம்மா, பிள்ளைகளுக்கு பிடிவாதம் பிடிக்க அம்மாக்கள் பழக்கக் கூடாது. எதிர்காலத்தில் நான் இந்த அம்மா மாதிரி இருக்க மாட்டன். அந்த அம்மா மாதிரித்தான் இருப்பன். ஓகே." என்றுவிட்டு என்னை அழைத்துக்கொண்டு நடந்தார்.

வாங்கவா என்று கேட்டதை சிந்து வாங்கவும் இல்லை. அத எடுத்துக்கொண்டு வாங்கோ என்று நான் சொல்லவும் இல்லை.


:cry::cry::cry::cry::cry:
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom