• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி

நிதனிபிரபு

Administrator
Staff member
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி = தமிழ்க்குடி!” என்பது வெறும் புரளியா? அல்லது உண்மையா?

: வி.இ.குகநாதன்




“கல் தோன்றி,மண் தோன்றா...” என்ற வசனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? தமிழ் மீது கண்மூடித்தனமான அன்பினால் மண் தோன்றுவதற்கு முன்னரே எமது மொழி தோன்றிவிட்டது எனப் பகுத்தறிவிற்குப் புறம்பாக நம்பியிருக்கலாம்; அல்லது முதல் மூத்தமொழிக்கான உயர்வு நவிற்சி அணி என இலக்கியத்தனமாகச் சிந்தித்திருக்கலாம்; அல்லது தமிழரிற்கு வேலையே இதுதானே! இது வெறும் வாய்ச்சவாடல் என கணித்திருப்பீர்கள். சில வேளைகளில் “[கல்] கல்வி அறிவு தோன்றாத [மன்] மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே [வாளோடு] வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம்” என்ற பழமொழி(?) விளக்கத்தைப் படித்திருக்கவும் கூடும்.

மேற்கூறியவை யாவுமே தவறானவை.

உண்மையில் இது ஒரு பழமொழி கூட அல்ல, மாறாக ஒன்பதாம் நூற்றாண்டில் (CE 9th cent) ஐயனாரிதனார் என்ற புலவர் பாடிய புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்ற ஒரு பாடலின் இடைப்பட்ட வரிகளே ‘கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி!` என்பனவாகும். இதன் பொருளை அறிவதற்கு பாடலை முழுமையாக அறியவேண்டுமே! பாடலினைப் பார்ப்போம்.

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!


- (பு. வெ. மாலை: சூத்திர விளக்க பாடல் 35) {கரந்தைப் படலம்}.

பாடலிற்கான பொருள்:

பொய் அகல - தோல்வி எனும் பொய் நீங்க; நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்- நாள்தோறும் புகழை நிலைநிறுத்தும் வீரம், என்ன வியப்பு ; வயங்கு ஒலி நீர் கையகல - தொடக்கத்தில் நீர் சூழ்ந்திருந்த உலகில் நீர் விலக மக்களின் வாழ்வு தொடங்கியது ; கல் தோன்றி- குறிஞ்சி வாழ்வு தோன்றி; மண் தோன்றா- மருதம் தோன்றாக் காலத்தே ; வாளோடு
முன் தோன்றி மூத்த குடி
- கையில், வாளோடு தோன்றி [ Appear] ஆகி,
இப்படி வீரமாகப் போர் செய்து ஆநிரை காக்கின்ற தொல்குடி.


எமக்கு முதன்மையான வரியினை(கல் தோன்றி,மண் தோன்றா ) நோக்கினால் , கல் என்ற சொல்லிற்கு மலை என்ற பொருளும் உண்டு. மலை என்பதனைக் குறிக்கத் தமிழில் ஆகக்குறைந்தது 22 சொற்களாவது உண்டு.





(படம் காண்க- படத்தில் பச்சை நிறத்தில் உள்ள சொற்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நீல நிறத்திலுள்ளவை = குறித்த மலையின் தனிப்பெயர்களாகவும், நாவல் நிறம்= பிற திராவிட மொழிகளில் உள்ளன, சிவப்பு நிறம் = இன்று அருகிவிட்டன). இந்த 22 சொற்களில் ஒன்றான `கல்` என்பது `மலை` மூலம் குறிஞ்சி நில வாழ்வினைக் குறிக்கின்றது.
அதே போன்று மண் என்பது மருதநில வாழ்வினைக் குறிக்கின்றது
(மண் = வயல் என்ற பொருளும் உண்டு). அதே போன்று தோன்றுதல் என்பது பிறப்பினை மட்டுமே குறிப்பதல்ல, மாறாக Appear என்ற பொருளும் உண்டு. எடுத்துக்காட்டாக `மேடையில் தோன்றினான்` என்பது அப் பொருளிலேயே அமையும்.

இப்போது விளங்குகின்றதா? குறிஞ்சியில் வாழ்வு தோன்றி,மருத நில வாழ்வு தோன்றுவதற்கு இடைப்பட்டகாலத்தில், வாளோடு தோன்றி (இங்கு பிறக்கும்போது யாரும் வாளோடு பிறக்கமாட்டார்கள், இங்கு தோன்றி=Appear) ஆநிரை(பசு கூட்டங்களை) காக்கும் தொல்குடியின் பெருமையினைப் பாடுவதே இப் பாடலாகும்.

இனிமேலாவது உரக்கச் சொல்லுங்கள், “கல் தோன்றி,மண் தோன்றா...” என்பது புரளியோ அல்லது உயர்வு நவிற்சி அணியோ அல்ல, மாறாகத் தமிழ் தொல்குடியின் ஆநிரை காக்கும் வீர வரலாறே.

நாம் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிதான்!”


 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom