• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 22

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 22


நிலனுக்கு வேலைகள் முடியவே இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்கு வந்தால் இளவஞ்சி இல்லை. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துதான் இருந்தான். கூடவே அவளின் இன்றைய மனநிலைக்கு இங்கு வராமல் இருப்பதே சரி என்றும் எண்ணினான். அதே நேரத்தில் அவள் இல்லாத அந்த அறை பிடிக்கவில்லை.

அவர்கள் ஒன்றும் ஈருடல் ஓருயிர் என்று வாழ ஆரம்பிக்கவில்லைதான். ஆனால், அவளைப் பார்க்கக் கிடைப்பதும், அவளும் என்னுடனேயே இருக்கிறாள் என்கிற அந்த உணர்வுமே அவனை இதமாகத் தாலாட்டும்.

இன்று அது இல்லை என்றதும் அறைக்குள் போன வேகத்திலேயே திரும்பி வந்து, அப்படியே புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்திருந்தான்.

அங்கு அவன் மனைவி அவளின் ஆஸ்தான கூடைக்குள் பூனைக் குட்டியாகச் சுருண்டு கிடந்தாள். அந்த விழிகளில் வார்த்தைகளில் அடக்கிவிட முடியா உணர்வுகளின் குவியல்.

“என்ன வஞ்சி?” என்றான் உடனேயே

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மடியில் கிடந்த கொப்பியை வருடிக்கொடுத்தாள். தன் மனத்தின் குமுறல்கள் அத்தனையையும் அவனிடம் சொல்ல வேண்டும் போலொரு உந்துதல். அப்படி எதையும் சொல்லிப் பழக்கமில்லாததில் சொல்ல வரவுமில்லை.

அவள் மடியில் கிடக்கும் அந்தக் கொப்பியில் ஏதோ உள்ளது என்று விளங்க, அங்கிருந்த டீப்போவை இழுத்து அவள் முன்னே போட்டுக்கொண்டு அமர்ந்தான். அவள் மடியில் கிடந்த கொப்பியை எடுத்து மேலோட்டமாகப் பிரட்டினான்.

‘என் அன்புக் கண்மணிக்கு இந்த அப்பம்மாவின் அன்பும் ஆசியும்’ என்று இருந்ததைக் கண்டதும் வேகமாக நிமிர்ந்து அவளை நோக்கினான். அவ்வளவு நேரமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று பார்வையை அகற்றிக்கொண்டாள்.

ஒன்றுமே கேட்கவில்லை அவன். அதை மூடிப் பக்குவமாகத் தள்ளி வைத்துவிட்டு, அவள் மடியில் கிடந்த கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக்கொண்டான்.

என்னவோ சொல்லப்போகிறான். உள்ளுணர்வு சொன்னதைக் கேட்டு அவனை நோக்கினாள் இளவஞ்சி.

“இந்த நேரத்தில இதச் சொல்லுறது சரியா தெரியேல்ல வஞ்சி. ஆனா எனக்கு மூச்சு முட்டுது. உன்னட்ட சொல்லிட்டா அந்தப் பாரம் இறங்கிடும் போல…” என்றுவிட்டு பாலகுமாரனிடம் நிலம் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டதை அப்படியே சொன்னான்.

அதைச் சொல்கையில் அவன் விழிகளில் தெரிந்த தவிப்பை, முகத்தில் தென்பட்ட அவமானக் கன்றலை எல்லாம் கண்ணைக் கூடச் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த இளவஞ்சி, “எனக்கும் தெரியும்.” என்றாள் சுருக்கமாக.

எப்படி என்று அவன் கேட்கவில்லை. பார்வை ஒருமுறை தையல்நாயகி அம்மாவின் கொப்பியிடம் சென்று வந்தது.

“கண்மண் தெரியாத கோவம் வந்தது வஞ்சி. இவே எல்லாம் என்ன மனுசர் எண்டு வெறுத்துப்போச்சு. ஆனா என்னால அத முழுமையா அவேட்ட காட்டவும் முடியேல்ல. ஒருத்தர் வருத்தக்காரன் எண்டா இன்னொருத்தர் வயசானவர்.” என்றான் அவன்.

“இதே ஈவு இரக்கத்தை என்னட்ட எதிர்பாத்திடாதீங்க நிலன்.” என்றாள் அவள் அவனை நேராக நோக்கி.

“வஞ்சி”

“ப்ளீஸ் நிலன். எங்களுக்க இந்தப் பேச்சு வர வேண்டாம். நான் ஆசைப்பட்டது எல்லாம் அமைதியான நிம்மதியான ஒரு குடும்ப வாழ்க்கைய. அத நீங்க எனக்குத் தரோணும்.” என்றாள் அவள் இப்போது ஒரு வேண்டுதலுடன்.

பேச்சற்றுப்போனது நிலனுக்கு. இமைக்காது அவளையே பார்த்தான். ஒரு பெண்ணின் நியாயமான ஆசை இது. அதையே வேண்டுதலாக வைக்கிறாள் அவள்.

சட்டென்று அவள் முகத்தை ஏந்தி முகம் முழுக்க முத்தமிட்டான். “எனக்கும் நீயும் நானுமா சேந்து அப்பிடி ஒரு வாழ்க்கை வாழத்தான் ஆசை. ஆனா அதை நான் மட்டும் நினைச்சா நடக்கும் எண்டுறியா?” என்று அவள் விழிகளுக்குள் பார்த்துக் கேட்டான் அவன்.

நீயும் யாரோடும் சண்டை பிடித்து நம் இருவரின் நிம்மதியைக் கெடுத்துக்கொள்ள முயலாதே என்கிறான்.

மெல்லிய கோபம் உண்டாக, “இந்தக் கலியாணத்துக்கு நீங்க மட்டும்தான் நினைச்சீங்க.” என்றாள்.

அதையே நடத்திய நீ இதையும் நடத்து என்கிறாள். கோபம் வர முதல்முறை விட்டுவைத்த இதழ்களை இந்தமுறை பற்றிக்கொண்டான். தன் கோபத்தை அவளில் நிலைநாட்ட முயன்றானா? இல்லை அந்தக் கோபத்தின் வழியில் தன் நேசத்தைச் சொன்னானா அவனுக்கே தெரியாது.

இதமாய் மனைவியின் இதழ்களில் லயித்தவன் மெல்ல விலகி, அவள் பிரதிபலிப்பு என்ன என்று அவள் முகத்தில் படிக்க முயன்றான். கோபமாக அவனை முறைக்க முயன்றாலும் அந்தக் கோபத்தின் முன்னே அவன் முத்தம் உண்டாக்கிய தடுமாற்றம் தெரியவும் சின்ன சிரிப்புடன் மீண்டும் அவள் இதழ்களை மூடினான்.

அந்த முத்தத்தின் முடிவில் அவன் மடியில் அவன் கைகளுக்குள் இருந்தாள் அவள்.

அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு எழுந்தான் அவன். அவள் பயந்துபோனாள். இருந்த மனநிலை மொத்தமாய் மாற, “கடவுளே நிலன்! உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது, இப்பிடித் தூக்காதீங்க எண்டு.” என்று அதட்டினாள் அவள்.

“அதுக்கு நீ கொஞ்சம் பூசணிக்கா மாதிரி இருக்கோணும். கம்புக்குச்சி மாதிரி இருந்தா இப்பிடித்தான் நடக்கும்.” என்றான் அவளைக் கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தி.

அவன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த டையை பிடித்து இழுத்து, “உங்களுக்கு என்னைப் பாக்க கம்புக்குச்சி மாதிரி இருக்கா?” என்றாள் கோபமாக.

இன்னுமே குனிந்து அவள் மூக்கோடு மூக்கினை உரசி, “இவ்வளவு நாளும் அப்பிடித்தான் இருந்தது. ஆனா….” என்றவனின் விழிகள், இரு தோள்களிலும் வெறும் நாடாக்கள் மட்டுமே தாங்கி நிற்க, கையில்லாத நீல நிற கொட்டன் நைட்டி அணிந்திருந்தவளை விஷமத்துடன் மேய்ந்துவிட்டு வர, “ஆனா இண்டைக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிறாய்.” என்றான் கண்ணைச் சிமிட்டி.

இவன் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மிஞ்சிப்போனால் ஏன் அங்கே வரவில்லை என்று கேட்டுக் கோபப்படுவான் என்றுதான் நினைத்தாள். அதனால்தான் இங்கே வந்ததும் இப்படி ஒன்றை அணிந்தாள். அதற்கு கோர்ட் போன்ற ஒன்றும் உண்டு. அறையை விட்டு வெளியே போகையில் அதைப் போட்டுக்கொள்வாள்.

இப்போது அதை எடுத்துப் போட வழியில்லை. பக்கத்தில் இருந்த போர்வையை எடுக்க அவள் முயல, அவள் கை மீதே தன் கையை வைத்துத் தடுத்துப் பிடித்தான் நிலன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“கண்ணியம் முக்கியம் மிஸ்டர் நிலன்!” என்று அதட்டி அவனை அடக்க முயன்றாள்.

“கட்டின மனுசிட்டியா?” என்றான் அவன் அதற்கும்.

இவனோடு பேசி முடியாது என்று விளங்க, “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் அதட்டல் போன்று.

“மாத்துறதுக்கு ஒரு உடுப்பு. நான் ஒண்டும் கொண்டு வரேல்ல.”

“நைட்டி தரவா?” என்றாள் வேண்டுமென்றே.

“நீ போட்டிருக்கிற இந்த நைட்டிக்க வரவே நான் ரெடி!” என்று கண்ணைச் சிமிட்டினான் அவன்.

“நிலன் உண்மையா அடி வாங்கப்போறீங்க. தள்ளுங்க!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்தவள் முதல் வேலையாக அவளின் கோர்ட்டை எடுத்து அணிந்துகொண்டாள்.

‘எவ்வளவு நேரத்துக்கு எண்டு நானும் பாக்கிறான்’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான் நிலன். அவள் தன் அலமாரியைத் திறந்து ஒரு ஷோர்ட்ஸ், டீ ஷார்ட் எடுத்துக்கொடுத்தாள்.

“அப்பிடியே சாப்பிடவும் ஏதாவது தா வஞ்சி. வீட்டை போயும் சாப்பிடாம வந்திட்டன்.” என்றான் அவன்.

அவன் குளிக்கச் சென்றுவிட கீழே இறங்கி வந்து சமையற்காட்டை ஆராய்ந்தாள். இரவு ஜெயந்தி செய்த பிட்டும் கோழிக்கறியும் இருந்தன. அவனுக்குப் பிட்டுக்கு நல்லெண்ணையில் பொரிக்கும் முட்டை பிடிக்கும் என்று அவர்களின் வீட்டில் வைத்துக் கவனித்திருக்கிறாள்.

வேகமாக நான்கு சின்ன வெங்காயங்களை உரித்து, சின்ன சின்ன துண்டுகளாக இவள் வெட்டுகையில் எழுந்துவந்தார் ஜெயந்தி. திடீர் என்று சமையற்கட்டிலிருந்து வந்த சத்தத்தில் வந்தவர் சத்தியமாக இளவஞ்சியை எதிர்பார்க்கவில்லை.

இதெல்லாம் அவள் இதுவரையில் செய்ததில்லை. சமையல் தெரியும். தையல்நாயகியின் வளர்ப்பில் அப்படிச் சமையல் தெரியாமல் போகச் சாத்தியமே இல்லை. ஆனாலும் சமைக்க அவளுக்கு நேரம் இருந்ததும் இல்லை. அவரும் விட்டதில்லை. ஆனால் இன்றைக்கு?

“என்னட்டச் சொல்லியிருக்க செய்து தந்திருப்பனேம்மா. தள்ளுங்கோ.” என்று அவர் வர, “இல்லை நீங்க போய்ப் படுங்கோம்மா. கறி எல்லாம் இருக்கு. இவருக்கு முட்டையும் இருந்தா விரும்பிச் சாப்பிடுவார். அதான் செய்றன்.” என்று தடுத்தாள்.

மகிழ்ந்துபோனார் ஜெயந்தி. அவள் சொன்ன விடயமும் அதைச் சொன்ன விதமும் நிலனை அவள் கணவனாக ஏற்றுக்கொண்டதைச் சொல்ல, “சரியம்மா. பாவிக்கிற பாத்திரங்களை இப்பவே கழுவ வேண்டாம். சிங்குக்க போட்டு விடுங்கோ. நாளைக்கு நான் பாக்கிறன்.” என்றுவிட்டு ஒதுங்கிக்கொண்டார் அவர்.

இவள் முட்டையும் பொறித்து உணவை எடுத்துக்கொண்டு மேலே சென்றபோது அவன் குளித்து உடை மாற்றியிருந்தான்.

அவளுக்கும் இரண்டு வாய் கொடுத்துத் தானும் உண்டான் நிலன். அன்று காலையிலும் இப்படித்தானே. அவனுக்கு வயிறு நிறைந்ததோ இல்லையோ அவளுக்கு நெஞ்சம் நிறைந்துபோயிற்று.

எப்போதும் இவள் ஒரு கரையிலும் அவன் ஒரு கரையிலும் படுப்பதுதான் வழக்கம். இன்று அவன் அதற்கு அனுமதிக்கவில்லை. அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.

என்னவோ இளவஞ்சிக்கும் விலக மனமில்லை. ஆழ்மனம் ஆத்மார்த்தமான ஒரு ஆறுதலைத் தேடிக்கொண்டிருந்தது காரணமா, இல்லை அவள் எவ்வளவுதான் விலகி நின்றாலும் விடாமல், இதமாகக் கால் நனைத்துப்போகும் அலை போன்று அவளை அனுசரித்துப் போகும் அவன் குண இயல்பு காரணமா தெரியவில்லை. அவளும் அவன் கையணைப்பில் அடங்கிக் கிடந்தாள்.

இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. தொழிலைப் பற்றியோ, இரு வீட்டையும் பற்றியோ, இல்லை அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் பற்றியோ பேச விருப்பமில்லை. பேசினால் சண்டையில்தான் முடியும். குறைந்த பட்சம் இருவரும் மற்றவர்பால் முறுக்கிக்கொள்ளும் நிலை வரும்.

அது பிடிக்காததால் அமைதியாக ஒருவர் மற்றவரின் அண்மையை அனுபவித்தனர்.

அப்போதுதான் மிதுனின் நினைவு வரவும் இன்று அவனோடு பேசியதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டுவிட்டு, “அவனை நம்பி ஷோர்ட் பிலிம் எடுக்க விடலாமா நிலன்?” என்று விசாரித்தாள்.

அவள் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதபோதும் அவள் மனத்தைக் கணித்துவிட்ட நிலன் நெகிழ்ந்துபோனான். அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, “இது தங்கச்சின்ர மனுசன் எண்டுறதால வந்த அக்கறையா, இல்ல…” என்று இழுத்தான்.

“நிலன்.”

“தங்கச்சின்ர மனுசன் எங்களை விட வயதில குறைஞ்சவனா இருந்தாலும் அதட்டி உருட்ட எல்லாம் மாட்டம் வஞ்சி.”

“நிலன்!” என்று அதட்டினாள் அவள். அவளுக்கு அதை உடைத்துப் பேசுவது பிடிக்கவில்லை.

அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இப்ப விளங்குதா உனக்கு? இதுதான் நீ. ஆருக்காகவும் எதுக்காகவும் உன்ர சுயத்தை இழந்திடாத.” என்றான் அவன்.

ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, “அவனுக்கு என்ன செய்றது எண்டு சொல்லுங்கோ நிலன்.” என்றாள்.

“உன்னைக் கொண்டுபோய் உனக்கு விருப்பம் இல்லாத துறைல விட்டா ஆர்வமா செய்வியா? அவன் நல்ல நல்ல ஷோர்ட் பில்ம்ஸ் எடுத்திருக்கிறான் வஞ்சி. அதால அவன் அதிலயே போகட்டும். அவன் வேலைக்குப் போய் உழைச்சுத்தான் வீடு நிறையோணும் எண்டுற நிலைல நாங்களும் இல்லத்தானே.” என்று எடுத்துச் சொன்னான் நிலன்.

என்றாலும் குழந்தையே வரப்போகிற ஒருவனை அப்படி உனக்கு விருப்பமான துறையில் போ என்று விடுவது நல்ல முடிவுதானா என்று யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.

“என்ன யோசின?”

“அவன் பிறகு படம் எடுக்கிறன் எண்டு இருக்கிற எல்லா பெட்டைகளோடயும் ஊர் சுத்துவான்.”

“அந்தளவுக்கு கவனிக்காம இருப்பானா நான்? கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பிள்ளை இருந்தா காதல் எண்டுவான். மூண்டு மாதம் கனக்க. பிரேக்கப் எண்டுவான். அவ்வளவுதான் அது. நடுவுக்க நடக்கிறதுதான் ஊரை சுத்தி எடுத்த கிபோட்டோக்களை போடுறது.”

“சும்மா ஊர் சுத்துறது மட்டும்தான் நடந்திருக்குமா? வேற நடந்திருக்காதா?” இந்தக் கேள்வி அவனைச் சுவாதி விரும்புகிறாளாம் என்று அறிந்ததில் இருந்தே அவளுக்குள் இருந்ததில் வினவினாள்.

“வேற என்ன நடந்திருக்கும் எண்டுறாய்? கொஞ்சத்துக்கு முதல் எங்களுக்க நடந்ததே அதுவா, இல்ல இனி நடக்கப் போகுதே அதா?”

“உங்களை! நான் என்ன கேக்கிறன் நீங்க என்ன கதைக்கிறீங்க?” என்று அவன் தோளிலேயே ஒன்று போட்டாள்.

சிரித்தாலும் அவளையே அவன் விழிகள் வட்டமிட்டன. அவன் வரும்போது சோகச் சித்திரமாக அமர்ந்திருந்தது என்ன, தற்போது அவனுக்கு அடிக்கிற அளவுக்கு மாறியிருப்பது என்ன?

“நீ ஓகேயா?” என்றான் அவளின் ஒற்றைக் கன்னத்தைத் தன் உள்ளங்கையில் தாங்கி.

ஒரு கணம் அமைதியானாள். பின் அவன் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து, “நீங்க பக்கத்தில இருந்தா நான் ஓகேயாத்தான் இருக்கிறன்.” என்றாள் உள்ளத்திலிருந்து.

இது போதாதா அவனுக்கு. முத்தங்களாலேயே அவளை மூர்ச்சையாக வைத்திருந்தான். குளித்ததினால் உண்டான அவன் உடலின் புத்துணர்ச்சி அவளுக்குள்ளும் குளிர் பரப்பிக்கொண்டு போயிற்று. அதற்கு இதமாகக் கணவனின் கதகதப்பு இருக்க அவளும் அவனோடு ஒன்ற, “அப்ப இன்னுமே நெருக்கமா வரவா? நீ இன்னும் ஓகே ஆகிடுவாய்.” என்றான் கிசுகிசுப்பாக.

வெட்கமே இல்லாமல் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பானா என்று விலகப் போகையில்தான் கவனித்தாள் அவள் அணிந்திருந்த கோர்ட்டும் அவளிடம் இல்லை, மற்றையதின் நாடாவும் அவள் தோள்களில் இருந்து நழுவியிருந்தது.

இதெல்லாம் எப்போது நடந்தது என்று அவள் அதிர்ந்து பார்க்க, “நாங்க எல்லாம் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருக்கிற மனுசர்.” என்று சிரித்தான் அவன்.

அவள் வேகமாகப் போர்வையை எடுத்துத் தன்னை மூடிக்கொள்ள அதற்குள் புகுந்துகொண்டான் அவன்.

பூவிலிருந்து தேன் பருகும் வண்டினைப் போன்று, தன் தேவதை பெண்ணின் தேகம் நோகாமல் தன் தேவைகள் தீர்த்தான். அவள் தடுமாறித் திணறிய பொழுதுகளில் எல்லாம் தட்டிக்கொடுத்து, ஆற்றுப்படுத்தி, தன்னோடு சேர்த்தணைத்து அந்தப் புத்தம் புதிய உணர்வுகளை அவளையும் அனுபவிக்க வைத்தான்.

தொடரும் :)
 
Top Bottom